சிறுதானியங்களில் சிறப்பானது கேழ்வரகு. இது உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேழ்வரகில் அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. ரத்தசோகை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து.
இத்தகைய மருத்துவ குணங்களால்தான், கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலுக்கு நல்ல ஓய்வான மனநிலையைத் தரும் என்றும், கவலை, மன அழுத்தம், தூக்கமின்மையைப் போக்க உதவும் என்றும் முன்னோர் நம்பினர்.
நாம் தினமும் அல்லது அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லி, தோசைக்கு பச்சரிசிக்கு பதில் கேழ்வரகை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.
கேழ்வரகு தோசை
இரண்டு கப் கேழ்வரகு, அரை கப் உளுந்து, அரை ஸ்பூன் வெந்தயம் இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து இரவு ஊற வைக்க வேண்டும். இரவு முழுதும் இவை நன்றாக ஊறிய பின்னர் காலையில் அதனை எடுத்து மிக்ஸியில் அரைத்து மதியம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
இட்லிக்கும் இதே அளவு தான். ஆனால் இட்லிக்கு கிரைண்டரில் அரைக்க வேண்டும். தோசைக்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.
மதியம் வரை புளித்த மாவை எடுத்து அதன் பின்னர் இட்லி அல்லது தோசைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருந்தால் ஃப்ரிட்ஜில் மாவை வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.
இதற்கு பல வகை சட்னிகள் சரியாக இருந்தாலும், எங்களுக்குப் பிடித்தது ரசமண்டி. சிலருக்கு காலை நேரம் முழு சாப்பாடு எடுத்துக் கொள்வார்கள். அப்படிப் பட்டவர்கள், மதியம் அல்லது மாலை நேரம் கேழ்வரகு தோசை அல்லது இட்லியை டிஃபனாக சாப்பிட்டால், காலை வைத்த ரசத்தில் மீதமுள்ள ரசமண்டியை இந்த தோசைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பருப்பு ரசம் வைத்தால் அடியில் பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் அதிகம் சேர்ந்து விடும். எனவே ரசத்தை நாம் பெரும்பாலும், லேசாகக் கலக்கி விட்டு மேலாகத்தான் ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது வழக்கம். அதன்பின் அடியில் தங்கிவிடும் கெட்டியான ரசத்தை (ரசமண்டி) தயிர் சாதத்திற்குக் கூட சிலர் சுவைக்காக பயன்படுத்துவர். இதனை தோசைக்கு இட்லிக்கு தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். சுவை அருமையாக இருக்கும்.