23/09/2019 12:46 PM

அருண் ஜேட்லி- மாணவர் அமைப்பில் இருந்து… மத்திய அமைச்சர் வரை! நெஞ்சம் நிறைக்கும் நினைவலைகள்!

இன்று காலமான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சங்க பரிவாரத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி.,இல் இருந்து அரசியலுக்கு வந்தவர். மத்திய அமைச்சராக உயர்ந்து சாதனை படைத்தவர்.

பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி, தில்லியில் 1952 டிச., 28 ஆம் தேதி பிறந்தவர். 66 வயதில் இன்று காலமான அவர், அரசியல் வாழ்வை மாணவர் அமைப்பில் பயிற்சி பெற்று, பின்னாளில் தொடங்கினார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தலைவராகவும் இருந்துள்ளார்.

தில்லியில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது மாணவர் தலைவராக இருந்துள்ளார். பி.காம்., படித்தார்.பின்னாளில் சட்டம் படித்து முடித்தார்.

1975இல் இந்திராவின் காங்கிரஸ் அரசால் நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டபோது, கடுமையாக எதிர்த்து போராடினார். இதனால் அப்போது, 19 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரான ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் இளைஞர் பிரிவில் முக்கியத் தலைவராக விளங்கினார்.

பின்னர் ஜன சங்கத்தில் சேர்ந்த இவர், 1977 முதல் 1980 வரை டில்லி பகுதி ஏபிவிபி., தலைவராக இருந்தார். அவருக்கு சிஏ., கணக்கு தணிக்கையாளர் படிக்கவே விருப்பம் இருந்தது. ஆனால் தேர்வில் வெற்றி பெற இயலாமல் போனது. இதனால் வழக்குரைஞர் துறையிலேயே கவனம் செலுத்தினார்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றியுள்ளார். 1989ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். 1990ல் தில்லி உயர் நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞர் ஆனார்.

1991 ஆம் ஆண்டுதான் அருண் ஜேட்லி, பாஜக.,வில் இணைந்தார். பின்னர் 1999 மக்களவைத் தேர்தலில் பாஜக., செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆனார். 2000ஆம் ஆண்டு சட்டம், நீதித்துறை மற்றும் நிறுவன விவகாரங்கள் துறைக்கு அமைச்சர் ஆனார். பின் அமைச்சரவையில் இருந்து விலகினார். 2002-2003ல் பாஜக., பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2003ல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார்.

2009 முதல் 2014 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். அதுவரை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 2014 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட களம் இறங்கினார்.

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இருந்தாலும், அவரது அனுபவம் அமைச்சரவைக்கு தேவை என்று கருதிய மோடி, தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார். நிதி அமைச்சகப் பொறுப்புடன் பாதுகாப்புத் துறையையும் சில காலம் சேர்த்து கவனித்து வந்தார்.

அருண் ஜேட்லியின் காலத்தில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல வரிகள் ஒன்றிணைக்கப் பட்டு, ஒரே நாடு ஒரே வரி என்ற வகையில் ஜிஎஸ்டி., வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்விரண்டிலும் அருண் ஜேட்லியின் பங்கு முக்கியமானது.

இந்நிலையில் திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்தது. 2018 மே மாதத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து, 2019 ஜனவரியில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அந்த நேரம் அவரது நிதி அமைச்சகப் பொறுப்பை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கவனித்துக் கொண்டார். அவரே, 2019 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தனது உடல் நிலை காரணமாக சுஷ்மா ஸ்வராஜைப் போல், அருண் ஜேட்லியும் அமைச்சரவையில் இடம்பெறுவதைத் தவிர்த்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, செயற்கை சுவாச கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அருண் ஜேட்லி, இன்று மதியம் 12 மணி அளவில் காலமானார்.

Recent Articles

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

கட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்!

இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் சுட்டுக் கொலை! தில்லியில் பயங்கரம்!

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.!

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Related Stories