
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது,தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதை மறந்தும் மறைத்தும் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ணன் கோபிநாத் அருகே உள்ள புதுப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிர்லா தொழில்நுட்ப மையத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த கண்ணன் கோபிநாத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே 59 ஆவது இடத்தில் வெற்றிபெற்றார்.

இவர் தங்கள் யூனியன் பிரதேசம் சார்பாக கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி கேரளா வந்தார். பணத்தை ஒப்படைத்த பின்னர் கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றார்.
பின் அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 10 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச் சென்றார்.
கேரளாவில் நடந்த மழை வெள்ள நிவாரணத்தின் போது நிவாரண உதவிகள் வழங்கியதோடு விடுப்பு எடுத்து கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டதால் கேரளா முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கேரளா ஐஏஎஸ் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றார்.
தான் வகித்து வரும் பதவியை மறைத்து சாதாரண மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் கண்ணன் கூறியதாவது:

என் கருத்து உரிமையை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன்னில் இருக்கும் ஒரு மாநிலம் முழுக்க தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது, அங்கே மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருகின்றன. இந்த நாட்டின் ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால் நான் அவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதால்தான் எனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்கிறேன்.
நான் ஒரு செய்தித் தாள் நடத்துபவராக இருந்தால் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் எண்களை மட்டுமே பிரசுரிப்பேன். இன்று ’19’ என்று குறிப்பிட்டிருப்பேன். ஏனெனில் காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து இன்று 19 ஆவது நாள்” என்று கூறியிருக்கிறார் கண்ணன் கோபிநாத்.
குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். அதாவது சமுதாயத்தின் குரலாக என் குரல் ஒலிக்கவேண்டுமென நினைத்தேன். செயலும் பட்டேன் ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன்.
இதுபோன்ற அமைப்பில் இருந்துக் கொண்டே இந்த அமைப்பை மாற்ற நான் கடும் முயற்சி செய்துவிட்டேன். ஆனால், இந்த அமைப்பு சரியாகும் எனும் நம்பிக்கை இல்லை. தற்போது அரசு ஓய்வு இல்லத்தில் வசிக்கிறேன். அடுத்து எங்கு போக வேண்டும் என தெரியவில்லை. மனைவி வேலை பார்க்கிறார். அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.