
சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.சவுமியா ரெட்டியை நியமனம் செய்துள்ளது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸில் எப்பொழுதும் கோஷ்டிபூசல் நடப்பெறுவது வாடிக்கை.
இந்நிலையில் மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா தேவ் எம்.பி. மகிளா காங்கிரஸ் பிரிவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து வரும் அவர், தமிழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த இளம் பெண்எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டியை நியமித்துள்ளார். கர்நாடகாவில் 7 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள ராமலிங்க ரெட்டியின் மகள். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சவுமியா ரெட்டி சூழலியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேல்படிப்பை அமெரிக்காவில் பயின்றவர்.

தொடக்கத்தில் காங்கிரஸ் இளைஞர் அணியில் இருந்த போது ராகுலின் குட்புக்கில் இடம்பெற்றவர். கடந்த 2018 தேர்தலில் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சவுமியா ரெட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸை பலப்படுத்தும் பணிகளை அவரிடம் ஒப்படைத்துள்ளது தலைமை.

ஏற்கனவே நக்மா இந்தப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அவர் மகிளா காங்கிரஸை பலப்படுத்தவில்லை என்றும், மாறாக பலவீனப்படுத்துகிறார் எனவும் புகார்கள் பறந்ததால், அவரிடம் பொறுப்பு பறிக்கப்பட்டு கேரளாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டது. இப்போது சவுமியா ரெட்டிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெயநகர் தொகுதி மக்களிடையே படித்தவர், பண்பானவர், என்ற நற்பெயர் சவுமியாவுக்கு உண்டு.



