
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை, பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஊடகங்களில் பல்வேறு நிறுவனங்களின் விற்பனை சரிவு, உற்பத்தி நிறுத்தம் என பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் தான் இதனை சரியாகக் கையாள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வாகன விற்பனை சரிவுக்கு, ஒலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் பலவற்றைப் பட்டியலிட்டார்.
பின்னர் அவரிடம் இது தொடர்பில் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதம் தோறும் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கின்றனர். இதுபோல ஏராளமானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள்… என்றார் நிர்மலா சீதாராமன்.
ஆனால் இவரது யதார்த்தமான பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள், சார்பு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், காங்கிரஸின் சமூகத் தள ஊடகத்தில் மிக மோசமான கருத்து பதிவிடப் பட்டிருந்தது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



