தற்கொலைக்கு முயன்ற தெலங்காணா ஆர்டிசி டிரைவர் சீனிவாச ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலங்காணா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒரு டிரைவர் பலியாவதற்கு துணிந்தார் .வேலை போய்விட்டது என்ற தீவிர விரக்தியில் அவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .
கம்மம் நகரில் சனிக்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்த டிரைவர் சீனிவாச ரெட்டி ஞாயிறன்று காலை மரணமடைந்தார்.
ஆர்டிசி தொழிலாளர்கள் தர்ணா நடத்தி வரும் நிலையில் தீவிர மன வேதனைக்கு ஆளான ஶ்ரீனிவாஸ் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
90% எரிந்து போன நிலையில் அவரை உயர் சிகிச்சைக்காக ஹைதராபாத் அழைத்து வந்தனர். கஞ்சன்பாக் அப்போலோ டிஆர்டிஓ மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிறு காலை உயிரிழந்தார்.
அவர் இறந்ததையொட்டி போலீசார் மருத்துவமனையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மருத்துவமனை எதிரில் ஆர்டிசி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கோஷமிடவே போலீசார் பலரை கைது செய்தனர் .
மிகுந்த மனவேதனையில் இருந்த ஸ்ரீனிவாசைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பினர் சக தொழிலாளர்கள். ஆனால் தன் வீட்டின் கேட் அருகில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்ட சீனிவாச ரெட்டி உடல் பற்றி எரிகையில்…” நான் என்ன ஆனாலும் பரவாயில்லை… 48 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும்… எத்தனை பேரை ஹோமத்தில் ஆகுதி ஆக்குவாய்..கேசிஆர்?” என்று பெரிய குரலெடுத்துக் கத்தினார்.
சீனிவாச ரெட்டியின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் என்று சிபிஎம் மாநில காரியதரிசி தம்மினேனி வீரபத்ரம் குற்றம் சாட்டினார். அரசாங்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று டிமாண்ட் செய்தார்.



