
கர்நாடகாவில் உள்ள ஹாவேரி என்ற இடத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு வித்தியாசமான செயல், விவகாரமான செயலாகி இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்து வைத்து, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப இயலாதவாறு செய்த செயல், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஹாவேரியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம், செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக காருகேட்டட் பாக்ஸ் எனப்படும் அட்டைப் பெட்டிகளை தலையில் மாட்டி வைத்து, தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை மாணவர் ஒருவர் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதை அடுத்து இந்தப் படம் வைரலானது. பலரும் கல்லூரியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு (டிடிபிஐ) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபோல் மீண்டும் நடந்தால் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.



