
2014 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய மாநிலங்களில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்., ஆதரவுக் குழுக்களின் நடவடிக்கைகளில் தமிழகமே முதலிடம் பிடித்துள்ளது.
பெரும்பாலான குழுக்களும் தாங்களே சுயமாக வளர்த்துக் கொண்ட ஐ.எஸ்., ஆதரவு அனுதாபிகளாக இருந்தன. அவற்றின் பொதுவான இணைப்பு, அவை வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களின் பிரசார பலத்தினாலும் அடிப்படைவாதத் தன்மையின் ஈர்ப்பினாலும் கையாளப்பட்ட ‘கலிபா’ அம்சத்தில் இணைந்தவை. இவற்றின் நிலப்பரப்பு, இங்கிலாந்தின் அளவைக் காட்டிலும் பெரிதானது. கடந்த 2015 இல் ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் புவியியல் பரப்பில் பெரும்பாலான பகுதியை இவை பிடித்திருந்தன.
அண்மையில் வெளியான ஒரு செய்தியில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்தியா முழுவதிலும் இருந்து 127 ஐஎஸ் அனுதாபிகளை கைது செய்துள்ளதாகவும், மாநிலங்கள் அளவில் பார்க்கும் போது, அதிக எண்ணிக்கையில் 33 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது. .

என்ஐஏ பதிவு செய்த 28 வழக்குகளில் 127 ஐஎஸ் அனுதாபிகள் கைது செய்யப்பட்டனர்! இரண்டு பேர் ராஜஸ்தானிலும் ஒருவர் குஜராத்திலும், ஒருவர் பீகார் மற்றும் மத்திய பிரதேசத்திலும் வைத்து என்.ஐ.ஏ., கைது செய்தது.
நவம்பர் 28, 2014 அன்று தனது முதல் ‘ஜிஹாதி’ பயங்கரவாத வழக்கினைப் பதிவு செய்ததாக பயங்கரவாத எதிர்ப்பு முகமை கூறியது! “ஆரிப் எஜாஸ், சஹீம், பஹத் மற்றும் அமான்” என்ற அவர்கள் அனைவரும் 20 முதல் 27வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த இளைஞர்கள், ஜிகாதி போரில் பங்கேற்க தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்ஸில் சேருவதற்கு மே 25, 2014 அன்று ஈராக் செல்ல முயன்றனர். இந்த இளைஞர்களை, ஆசியாவின் சக்தியாகத் திகழும் இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஜிகாத் போரில் ஈடுபடத் தூண்டும் வகையில் காபிர்கள் என்று கூறி, இஸ்லாமிய அடிப்படை வாதக் கருத்துகளுடன் ஈர்த்தவர், அபூபக்கர் அல்-பாக்தாதி என்ற ஐ.எஸ்., தலைவர் !

ஐ.எஸ்.ஐ.எஸ் அதன் பயங்கரவாத நோக்கங்களுக்காகவும், இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தைப் பரப்பவும் இளைஞர்களைக் கவர்ந்திழுத்தது. பயங்கரவாதப் பயிற்சி, ஆட்சேர்ப்பு, திட்டமிடல் மற்றும் மரணதண்டனை போன்ற பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மி இணையம் வழியே திட்டமிட்டு கையாளப் பட்டிருப்பதை என்.ஐ.ஏ விசாரணைகள் தெரியப் படுத்தின.
ஐ.என்.ஏ.,வால் கைது செய்யப்பட்ட 127 ஐ.எஸ்., அனுதாபிகளும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள இஸ்லாமிய மதபோதகர்களின் பேச்சுகளைக் கேட்பதாகவும் வீடியோக்களைப் பார்ப்பதாகவும் கூறியுள்ளனர். இவர்களில் முக்கியமானவர், இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்! இவர், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர்!

மும்பையைச் சேர்ந்த நாயக், பணமோசடி மற்றும் வெறுப்புணர்வுப் பேச்சுகளில் தீவிரவாதத்தைத் தூண்டியதாக இந்திய அரசால் தேடப் பட்டவர். அவர், இந்திய அரசை ஏமாற்றி, இப்போது மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஜூலை 2016 இல் வங்கதேசத்தின் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலரைக் கொன்றவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது. அந்தத் தாக்குதல் நிகழ்வில் கைது செய்யப்பட்ட ஒருவர், தாம் ஜாஹிர் நாயக்கின் பிரசங்கங்களால் தாக்கமடைந்ததாகத் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், ஜாஹிர் நாயக், இந்தியாவை விட்டு வெளியேறினார்.
இந்த ஆண்டு இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஏப்ரல் 21ஆம் தேதி நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளைக் கேட்ட பின்னர், தாங்கள் பயங்கரவாதப் பாதையில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப் பட்டவர்கள் கூறினர்.
இது குறித்து ஓர் அதிகாரி தெரிவித்த போது, “இந்தக் குழு ஹஸீமின் வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைத்தளங்களில் கிடைத்ததாகக் கூறியது. இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனெனில் அவை பயங்கரவாதத்தைப் பரப்ப தூண்டி இழுப்பவை ” என்றார்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் அடங்கிய குழு ஐ.எஸ் உடன் பயங்கரவாதத் தொடர்பு கும்பலை உருவாக்கி, கோவையை மையமாகக் கொண்டு சில இந்து தலைவர்களைக் கொல்ல ஒரு கிரிமினல் சதித்திட்டத்தில் இறங்கியதைக் கண்டறிந்ததை அடுத்து, தமிழகத்தில் என்.ஐ.ஏ., 2018 அக்டோபர் 30 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மத மோதல்களைத் தூண்டிவிட்டு, சமுகத்தில் பிளவை ஏற்படுத்தி, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவும் அமைந்திருந்தது.

கோயம்புத்தூரில் வசிக்கும் முஹம்மது அசாருதீன், ஐ.எஸ்ஸின் சித்தாந்தத்தை பரப்புவதற்கும், தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளம், தமிழகத்தில் இளைஞர்களை ஐ.எஸ்.,ஸுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தீவிரமாக வேலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஐ.எஸ்.,ஸின் தலைவர் அல்பக்தாதி சிரியாவில் கொல்லப் பட்டுள்ளார். அதோடு, தமிழகம், கேரளத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினரின் ரகசிய நடவடிக்கைகள் மேலும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது.