
புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், 10 சவரன் நகை மற்றும் சில்வர் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
மேலும் அதே பகுதியில் உள்ள காந்தி நகரிலும் லட்சுமி – குமார் தம்பதியினரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன்கள் என சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.