
தாசில்தார் விஜயா ரெட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் நடந்து முடிந்த உடனே மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீ, அந்த வேலூருவில் எப்படி வேலை செய்வாய் என்று பார்த்து விடுகிறேன் என தாசில்தாருக்கு சர்பஞ்ச் மிரட்டல் விடுத்ததும், தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர் கைது செய்யப் பட்டதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில், தாசில்தார் விஜயாரெட்டி உயிரோடு எரிக்கப் பட்ட அதே நாளில் வரங்கல் அர்பன் மாவட்டத்தில் வேலூரு மண்டல பெண் தாசில்தார் ரஜினியை ஒரு கிராம சர்பஞ்ச் மிரட்டிய செயல் செவ்வாய்க் கிழமை அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து தாசில்தாரிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட ‘சுபேதாரி’ போலீசார், செவ்வாய்க் கிழமை அன்று வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து தலைவரை கைது செய்தனர்.
வரங்கல் புறநகர் மாவட்டம் வேலூரு மண்டலம் ‘மல்லிகுதுர்கா’ கிராம சர்பஞ்ச் ‘கோதுல’ ராஜாரெட்டிதான், பினாமி மூலம் வாங்கி நிலத்தை பட்டா செய்ய வேண்டும் என்று தாசில்தாரை சந்தித்து கோரியுள்ளார். அது மட்டுமன்றி மற்றோர் இடத்திலும் நிலம் வேண்டும் என்று கேட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்துள்ளார்.
அதோடு திங்கள் அன்று ஹனுமகொண்டாவில் உள்ள கேஎல்என் ரெட்டி காலனியில் வசித்து வரும் தாசில்தார் வீட்டுக்கு காலை எட்டரை மணிக்கு வந்துள்ளார். மேடத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது தாசில்தாரின் கணவர் ஆபீஸில் சென்று சந்திக்க வேண்டும் என்று கூறி தடுத்தும் கேட்காமல் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்துள்ளார்.
அவரைத் தடுத்ததால் வெளியில் வந்து நின்ற சர்பஞ்ச், “நீ எப்படி வேலூருவில் வேலை செய்வாய் என்று பார்த்து விடுகிறேன்” என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்தச் சூழலில் தாசில்தார் சுபேதார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவே சர்பஞ்ச் மீது வழக்குப்பதிவு செய்து அவரை செவ்வாய்க் கிழமை போலீஸார் கைது செய்தனர்.



