புனே ஐ.டி. பெண் கொலை: காவலாளி கைது

கடந்த ஒரு மாதத்தில் புனேவில் படுகொலை செய்யப்படும் இரண்டாவது பெண் ஐடி ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஹிஞ்சேவாடியில் உள்ள ஐடி தொழிற் பூங்காவில் பணியாற்றி வந்த கேரளைவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது,

“புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஐடி தொழிற்பூங்காவில் இன்போசிஸ் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 9-வது தளத்தில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக எக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்றோம். அந்தப் பெண்ணின் கழுத்தை கணினி கேபிளைக் கொண்டு இறுக்கி கொலை செய்திருந்தனர். அவரது முகத்திலும் காயங்கள் இருந்தன. இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிக்குள் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும். கொலை சம்பவம் நடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அவசர வேலை காரணமாக விடுமுறை நாளன்று அந்தப் பெண் அங்கு பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்தப் பகுதிக்கு காவலாளியைத் தவிர வேறு யாரும் செல்ல வாய்ப்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அசாமைச் சேர்ந்த அந்த காவலாளியை கைது செய்துள்ளோம். அந்த நபரும் கொலை நடந்த அன்று மாலையே தனது சொந்த ஊரான அசாமுக்கு செல்ல முயற்சித்தது எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட பெண் கேரளாவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 23” என்றார்.

கடந்த ஒரு மாதத்தில் புனேவில் படுகொலை செய்யப்படும் இரண்டாவது பெண் ஐடி ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.