
எப்படியோ இறுதியில் ‘பின்லாடென்’ பிடிபட்டான். அதுவும், அஸ்ஸாமில்! என்ன… அஸ்ஸாமில் பின்லாடன் எப்படி பிடிபட்டான் என்று ஆச்சரியப் படுகிறீர்களா?
கோல்பாரா மாவட்டத்தில் மக்களை பீதிக்கு உள்ளாக்கி பலரின் உயிரை குடித்த ஒரு யானைக்கு அங்குள்ளவர்கள் ஒசாமா பின்லாடென் என்று பெயரிட்டுள்ளனர். சென்ற அக்டோபரில் அஸ்ஸாமில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இந்த யானை 5 பேரைக் கொன்றது.
இதனைப் பிடிப்பதற்கு அதிகாரிகள் ஒரு தனிப்பட்ட திட்டம் மேற்கொண்டார்கள். அந்த ஆபரேஷன் வெற்றி அடைந்து விட்டதாக அசாம் மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

யானையை பிடிப்பதற்கு ட்ரோன்கள், வளர்ப்பு யானைகள் இவற்றைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக காட்டில் காட்டிலாகா அதிகாரிகள் ட்ராக் செய்தார்கள். நிபுணர்களான ஷூட்டர்கள் அம்புகளால் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அருகில் மனித வசிப்பிடங்கள் எதுவும் இல்லாத காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். அக்டோபர் மாதத்தில் 24 மணி நேர இடைவெளியில் பின்லாடென் யானை கோல்பாரா மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட 5 பேரைக் கொன்றது.

வன இலாகாவினரின் கணக்குப்படி சென்ற ஐந்து ஆண்டுகளில் யானை தாக்குதலால் நம் நாட்டில் சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர். 2011ல் இருந்து இதுவரை 700 யானைகள் கொல்லப்பட்டுள்ளன!



