
கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்! அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
வசிஷ்ட நாராயண் சிங் ஒரு குழந்தை மேதையாக பள்ளியிலும் கல்லூரி யிலும் அடையாளம் காணப்பட்டார்.
ஐன்ஸ்டீன் கொள்கையை கேள்வி கேட்டு சவால்விட்ட விஞ்ஞானி வசிஷ்ட நாராயண் சிங், பீகார் ஐன்ஸ்டின் என்று புகழப்பட்டார்.
வசிஷ்ட நாராயண் சிங் சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
நவம்பர் 14 வியாழன் காலையில் பாட்னா மருத்துவமனையில் மரணம் அடைந்த அவருடைய உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உறவினர்கள் மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் வருத்தத்தோடும் அவமானத்தோடும் காத்திருக்க நேர்ந்தது.
பீகாரில் இதுபோன்று இறந்தவர்கள் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலைமை புகழ்பெற்ற இந்த கணித மேதைக்கு மட்டுமல்ல…. பலருக்கும் நேர்ந்து வருகிறது. ஆளும் அரசின் மீது விமர்சனங்கள் கூட எழுந்துள்ளன.
இந்தியாவில் பிறந்த இதுபோன்ற மேதைகளுக்கு நாம் அளிக்கும் கவுரவம் இதுதானா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
வசிஷ்ட நாராயண் தன்னிகரில்லாத மேதாவி என்று புகழாரம் சூட்டிய மாநில அரசு, அவருடைய கணித அறிவின் முன் உலகம் மண்டியிட்டது என்று குறிப்பிட்டது.
வசிஷ்ட நாராயண் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறிப்பிட்டார். அவருடைய வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரிடம் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்த தோடு நாராயண் சிங் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தி வைத்தார்.
1942 ஏப்ரல் 12ல் பீகாரில் பசந்த்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார் வசிஷ்ட நாராயண். கடந்த நாற்பதாண்டுகளாக ‘ஸ்கிஜோப்ரினியா’ என்ற மனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
பீகாரில் ஆரம்ப கல்வியை முடித்த வசிஷ்ட நாராயணா பாட்னா அறிவியல் கல்லூரியில் மேற்படிப்பு முடித்து 1965இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிஹெச்டி தேறினார்.
நாசாவில் ஸ்பேஸ் தியரி பற்றி ஆராய்ந்தார். அதன்பின் ஐஐடி கான்பூர் மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட் கொல்கத்தா ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார்.
பிஎன் மண்டல் யுனியில் விசிடிங் பேராசிரியராக இருந்தார்.
இத்தகைய சிறந்த விஞ்ஞானிக்கு எந்த அரசாங்க அமைப்பும் ஆதரவு அளிக்காதது துரதிருஷ்டமே!
அவருக்கு ஏற்பட்ட மனச் சிதறல் நோய் காரணமாக அவருடைய மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
மிகுந்த நிராகரிப்புக்கு உள்ளான இந்த மேதை ஒருமுறை மருத்துவமனையில் இருந்து காணாமல் சென்று சில ஆண்டுகளுக்குப் பின் குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.