லக்னோ:
பிரதமர் மோடி குறித்து அவதூறு வெளியிட்டதாக ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகின் முதல்நிலை இணைய தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியானது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்ததால், அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நந்த் கிஷோர் என்ற வழக்குரைஞர் ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நேற்று புகார் அளித்தார். பிரதமர் மோடி குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல் தனக்கும், மற்றவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு கமல் கிஷோர் உறுதி செய்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், எனவே இது குறித்து எதையும் தெரிவிக்க முடியாது எனவும் கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



