
மணப்பெண் அணிந்திருந்த புடைவையின் தரம் சரியாக இல்லை; அதை மாற்றி விட்டு வா என்று கூறியும், மணப்பெண் அதை மாற்றிக் கொண்டு வராததால் கோபமடைந்த மணமகன் வீட்டார் கல்யாணத்தையே நிறுத்திவிட்டு, காணாமல் போய் விட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம்.
கர்நாடக மாநிலம், ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, திருமண பந்தத்தில் இணைவதற்கு தயாராகினர்.
ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி, தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்த நிலையில், தங்களது திருமண வாழ்க்கை முடிவு குறித்து தங்கள் வீட்டில் பேசியுள்ளனர். தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் சம்மதம் பெற்று, திருமண ஏற்பாடுகளில் மூழ்கினர்.
இந்நிலையில், திருமண நாள் அன்று திருமணச் சடங்கின் போது சங்கீதா அணிந்திருந்த புடைவை சரியில்லை, அதன் தரம் சரியில்லை என்றெல்லாம் கூறிய மணமகன் ரகுகுமாரின் பெற்றோர், அந்தப் புடைவை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி, அதனை மாற்றிவிட்டு வேறு புடைவை கட்டிக் கொண்டு வருமாறு கூறினர்.
ஆனால் மணப்பெண் சங்கீதாவோ, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரகுகுமாரின் பெற்றோர், உடனே திருமணத்தை நிறுத்துவதாகக் கூறி, ரகுகுமாரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கூறிய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, வேறு எதுவும் பேசாமல், ரகுகுமாரும் அமைதியாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் சங்கீதாவின் உறவினர்கள் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். இதை அடுத்து, ச்ங்கீதாவின் பெற்றோர் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம், ரகுகுமார் மற்றும் பெற்றோர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.