காப்பானுக்கு ஆயிரம் வழி என்றால் கள்ளனுக்கு லட்சம் வழியாயிருக்கிறது. எப்படி எல்லாம் பணத்தை, போதைப் பொருள்களை, கடத்தல் பொருள்களை சுங்கத்துறையினர் கண்களில் படாமல் மறைத்து கடத்தி வரலாம் என்று திட்டம் தீட்டி கள்ளத்தனம் செய்பவர்கள் செயல்படுகையில், சில நேரங்களில் எப்படியாவது மாட்டி விடுகிறார்கள்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையம்தான். இங்கே புதன்கிழமை துபையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். அப்போது, முரத் அலி என்ற இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது.
இதனால் உஷார் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை செய்ததுடன், தனிப்பட்ட வகையில் சோதனையும் செய்தனர். ஆனாலும், அவரிடம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெறுத்துப் போன அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொருட்களை சோதித்தனர். ஆனால், அதிலும் வெறும் நிலக்கடலை, சமைத்த ஆட்டுக்கறி, பிஸ்கட் இவை மட்டுமே இருந்தது. ஆனாலும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு முரத் அலி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
முழு நிலக் கடலையை அவர் உடைத்துப் பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் கடலைப் பருப்புக்கு பதிலாக, வெளிநாட்டு கரன்சி இருந்துள்ளது. பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தால் அதற்குள் முன்னும் பின்னும் முழு பிஸ்கட்டை வைத்தும், அதற்கு கீழ் துளையிட்டு வெளிநாட்டு கரன்சி வைக்கப் பட்டும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே போல், சமைத்த ஆட்டுக்கறியை பிரித்துப் பார்த்தால் அதற்குள்ளும் வெளிநாட்டு கரன்சி இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இந்த வழிகளில் எல்லாம் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதிர்ந்தனர். முரத் அலி கடத்தி வந்த, 2,22,500 சவுதி ரியால், 1,500 கத்தார் ரியால், 1,200 குவைத் தினார், 300 ஓமன் ரியால், 1,800 யூரோ என 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டு கரன்சியை கடத்தி வந்த முரத் அலியை தில்லி போலீஸ் வசம் ஒப்படைத்து, சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.