
உ.பி.யில் உள்ள புலந்த்சாஹர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நபரை அக்கும்பல் படுகொலை செய்தது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடி தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது… ஜேவாரில் இருந்து புலந்த்சாஹர் நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது வாகனம் வந்தபோது வாகனம் திடீரென நின்றது. அந்த வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டது. வாகனத்தில் இருந்தவர்களை கீழே இறக்கிய அந்த கும்பல், 50 வயது பெண் உள்பட 4 பெண்களை பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, அவர்களிடமிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. தப்பிச் சென்ற அக்கும்பலை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இதே போல் ஒரு சம்பவம் நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் தில்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்து, காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டி, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. தற்போது மீண்டும் அதேபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.



