
புது தில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, மே 20-ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் மீதான விசாரணையும் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கல்யாண் சிங் தவிர, மற்றவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டும் என்பதால் சாட்சிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாரும் அதிக வாய்தா பெற்று கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.



