புது தில்லி:
கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம் செய்த காங்கிரஸ்காரர்களுக்கு ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறைச்சி விற்பனையாளர்கள், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்த தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று கேரளாவில் பல்வேறு இடங்களில் மாட்டுக் கறி திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து கன்னூரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் மக்களின் கண் முன்பு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ட்விட்டரில் கடுமையான கண்டங்களை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. “சிந்தனையற்ற, காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயலை காங்கிரஸும் நானும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கோபப்பட்டிருக்கிறார் அவர்.
What happened in Kerala yesterday is thoughtless,barbaric& completely unacceptable to me &the Congress Party.I strongly condemn the incident
— Office of RG (@OfficeOfRG) May 28, 2017