
திருவாரூர்:
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஆரூரா…. தியாகேசா… என்று முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ வீதியில் இருந்து தொடங்கிய ஆழித் தேரோட்டம் 4 மாடவீதிகளில் வலம் வருகிறது.
இன்று காலை தமிழக அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் பங்கேற்றார். 92 அடி கொண்ட ஆழித்தேரோட்டம் ஆசியாவிலேயே மிக உயரமானதாகும்.
முன்னதாக, இந்த ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேரின் மேல் அலங்கரிக்கப்பட்ட கட்டுமானப் பகுதி சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5:30க்கு நிலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் தேர், கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து, மேல வீதிக்குத் திரும்பியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கட்டுமானப் பகுதி லேசாக தேரின் வலதுபுறம் சாய்ந்தது. உடனடியாக தேர் நிறுத்தப்பட்டு, இரும்புக்கம்பி மற்றும் கயிற்றைக் கொண்டு சரிந்த கட்டுமானப் பகுதி இழுத்துக் கட்டப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் விநாயகர் தேர் வடம் பிடிக்கப்பட்டு முற்பகல் 10:45க்கு நிலைக்கு அருகில் நிறுத்தப்பட்டது.
ஆழித் தேர் புனரமைக்கப்பட்ட போது, விநாயகர் தேர் புதுப்பிக்கப்படவில்லை. விநாயகர் தேர் பழமையானது என்பதால் தேரில் விரிசல் ஏற்பட்டு கட்டுமானப் பணி சாய்ந்துள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர். விநாயகர் தேர் சாய்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



