spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் தீவிரமானதே!

கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் தீவிரமானதே!

- Advertisement -
manadhin kural
manadhin kural

மனதின் குரல் (12ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள் : 31.5.2020
ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்,

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். கொரோனாவின் தாக்கம் நம்முடைய மனதின் குரலையும் விட்டு வைக்கவில்லை. கடந்தமுறை நான் உங்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த வேளையில், பயணிகள் ரயில்கள் முடக்கப்பட்டிருந்தன, பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தமுறை, இவற்றில் பல சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டன. ஷ்ரமிக் ஸ்பெஷல் – புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிகள் செயல்படத் தொடங்கி விட்டன. மற்ற சிறப்பு ரயில்களும் தொடங்கப்பட்டு விட்டன.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, விமான சேவைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன, மெல்ல மெல்ல தொழில்களும் செயல்படத் தொடங்கி விட்டன. அதாவது பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி இப்போது இயங்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் நாம் மேலும் அதிக எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியம். ஒரு மீட்டர் இடைவெளி விடுதல் என்ற விதிமுறையையும், முகக் கவசம் அணிதல் என்ற வழிமுறையையும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வீட்டிலே இருத்தல் என்பதனையும் நாம் கடைப்பிடிப்பதிலில் எந்தவிதமான சுணக்கத்தையும் காட்டக் கூடாது.

நாட்டிலே அனைவருடைய சமூகரீதியிலான முயற்சிகள் காரணமாக கொரோனாவுக்கு எதிரான போர் மேலும் தீவிரமாக எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் பிற உலக நாடுகளைப் பார்க்கும் போது, உள்ளபடியே இந்தியர்கள் படைத்திருக்கும் சாதனை எத்தகையது என்பதை நம்மால் உணர முடிகிறது. நமது மக்கள்தொகை பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் பலமடங்கு அதிகமானது. நம் நாட்டை எதிர்நோக்கும் சவால்களும் பலதரப்பட்டன. ஆனால் இருந்தாலும்கூட, பிற உலக நாடுகளோடு ஒப்பு நோக்கும் போது, நமது நாட்டிலே கொரோனாவால் அந்த அளவுக்குப் பரவ முடியவில்லை. கொரோனா ஏற்படுத்தும் மரணங்களின் எண்ணிக்கைகூட, நமது நாட்டிலே கணிசமான அளவுக்குக் குறைவு தான்.

ஏற்பட்டிருக்கும் இழப்பு துக்கம் அளிப்பது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் நம்மால் இன்று காப்பாற்றப்பட்டிருப்பது என்பதைப் பார்க்கும் வேளையில், நாட்டின் சமூகரீதியிலான உறுதிப்பாட்டுணர்வு தான் இதற்குக் காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். இத்தனை பெரிய நாட்டிலே, நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், தாங்களும் இந்தப் போரிலே கச்சை கட்டிக் கொண்டு பங்களித்தார்கள், உள்ளபடியே இது மக்களால் இயக்கப்பட்ட ஒன்று.

நண்பர்களே, நாட்டுமக்களின் உறுதிப்பாட்டுணர்வோடு, மேலும் ஒரு சக்தி இந்தப் போரிலே நமக்கு பெரியதொரு துணைக்கரமாக இருந்து வந்திருக்கிறது என்றால், அது நாட்டுமக்களின் சேவாசக்தி. உண்மையிலே, சேவை மற்றும் தியாகம் குறித்த நமது எண்ணப்பாடு, நமது குறிக்கோள் மட்டுமல்ல, பாரதநாட்டின் வாழ்க்கைமுறையும் கூட. மேலும் सेवा परमो धर्म:, அதாவது சேவையே தலையாய அறம், அதுவே சந்தோஷம், அதுவே நிறைவளிப்பது என்று நம் நாட்டிலே கூறப்படுகிறது.

பிறருக்கு சேவைபுரியும் மனிதர்களின் வாழ்க்கையில், எந்தவிதமான மனவழுத்தம் காணப்படுவதில்லை என்பதை நீங்களேகூட பார்த்திருக்கலாம். அவர்களது வாழ்க்கையில், வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தில், முழுமையான தன்னம்பிக்கை, ஆக்கப்பூர்வமான நோக்கு, உயிர்ப்பு ஆகியன ஒவ்வொரு கணமும் பளிச்சிடும்.

நண்பர்களே, நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தைச் சேர்ந்த நண்பர்கள் போன்ற இவர்கள் அனைவரும் புரிந்துவரும் சேவை பற்றி நான் பலமுறை விரித்துப் பேசியிருக்கிறேன். மனதில் குரலிலும்கூட நான் அவர்களைப் பாராட்டி யிருக்கிறேன். இப்படி சேவை புரிவதில் தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. மோஹன் அவர்கள். சி. மோஹன் அவர்கள் முடிதிருத்தகம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார். தன்னுடைய உழைப்பின் ஊதியமான 5 இலட்சம் ரூபாயை இவர் தனது மகளின் படிப்புக்கு என சேமித்து வைத்திருக்கிறார்; ஆனால் இந்த மொத்த சேமிப்பையும், இந்த காலகட்டத்தில் அவர் தேவையால் வாடுபவர்கள், ஏழைகள் ஆகியோரின் சேவையில் செலவு செய்து விட்டார்.

இவரைப் போலவே, அகர்தலாவிலும், கைவண்டி தள்ளிச் சென்று வாழ்க்கை நடத்திவரும் கௌதம்தாஸ் அவர்களுமேகூட, தன்னுடைய சேமிப்பு மொத்தத்தையும் கொண்டு, ஒவ்வொரு நாள் காலையிலும், அரிசி-பருப்பு வாங்கி சமைத்து பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து வருகிறார்.

பஞ்சாபின் படான்கோட்டிலிருந்தும் ஒரு நல்லுதாரணம் தெரிய வந்திருக்கிறது. இங்கே மாற்றுத்திறனாளி சகோதரரான ராஜு அவர்கள், மற்றவர்கள் உதவியைத் துணைக்கொண்டு சேமித்து வைத்திருந்த தொகையால் 3000 முககவசங்களை செய்து மக்களுக்கு வழங்கினார். இந்தக் கடினமான சூழ்நிலையில், சுமார் 100 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களையும் சகோதரர் ராஜு சேகரித்து வழங்கி இருக்கிறார்.

நாட்டில் பல துறைகளிலிருந்து பெண்கள் சுயவுதவிக் குழுக்களின் உழைப்பு தொடர்பான கணக்கே இல்லாத செய்திகள் இன்றைய நிலையில் நம் முன்னே வெளியாகி வருகின்றன. கிராமங்களில், சிறிய வட்டாரங்களில், நமது சகோதரிகளும் தாய்மார்களும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் முககவசங்களைத் தயாரித்து வருகிறார்கள். சமூக நிறுவனங்கள் அனைத்தும் இந்தச் செயல்பாட்டில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்து கொண்டிருக்கின்றன.

நண்பர்களே, இப்படி எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுக்களை, ஒவ்வொரு நாளும் கண்கூடாகக் கண்டு வருகிறோம், அவை பற்றிக் கேள்விப்பட்டும் வருகிறோம். எத்தனை எத்தனை நபர்கள், NamoApp வாயிலாகவும், பிற வகைகளிலும் தங்களுடைய முயற்சிகள் பற்றி எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

பலமுறை, நேரக்குறைவு காரணமாக, பலருடைய, பல அமைப்புகளுடைய, பல நிறுவனங்களுடைய, பெயர்களை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடிவதில்லை. சேவையுணர்வால், மக்களுக்கு உதவிகள் புரிந்துவரும் இப்படிப்பட்ட அனைவரையும் நான் மெச்சுகிறேன், அவர்களுக்கு என் மரியாதையை அளிக்கிறேன், அவர்களுக்குத் தலைவணங்குகிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மேலும் ஒரு விஷயம், என் மனதைத் தொட்ட ஒன்று என்றால், அது இந்த சங்கடம் நிறைந்த காலகட்டத்தில் innovation- புதுமையான கண்டுபிடிப்புகள். நமது சிறிய வியாபாரிகள் தொடங்கி ஸ்டார்ட் அப்புகள் வரை, நமது பரிசோதனைக்கூடங்கள் என பலரும் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரிலே, பல புதியபுதிய வழிமுறைகளை ஏற்படுத்தி வருகிறார்கள், புதியபுதிய கண்டுபிடிப்புக்களைச் செய்து வருகிறார்கள் என்பது கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வு.

நாசிக் நகரைச் சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவருடைய எடுத்துக்காட்டு மிகவும் சுவாசரியமானது. ராஜேந்திரா அவர்கள் நாசிக்கின் சத்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. தனது கிராமத்தை கொரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற, அவர் தனது ட்ராக்டரோடு ஒரு கிருமிநாசினி கருவியை இணைத்தார், இந்த நூதனமான கருவி அதிக தாக்கமேற்படுத்தும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுகிறது.

இதைப் போலவே, சமூக ஊடகங்களிலும் பல படங்களை நான் பார்த்தேன். பல கடைக்காரர்கள், ஒருமீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக, தங்கள் கடைகளிலே ஒரு பெரிய குழாயை பொருத்தி இருக்கிறார்கள்; இதன் ஒருபுறத்தில் மேலிருந்து பொருட்களைப் போட்டால், மறுபுறமிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய பொருட்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதே போன்று கல்வித்துறையிலும் பலவகையான புதுமைகளை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து புரிந்து வருகிறார்கள். இணையவழி வகுப்புகள், காணொளி வகுப்புகள், ஏன், இவற்றிலும்கூட பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி புதுமைகள் புரியப்பட்டு வருகின்றன.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பாக நமது பரிசோதனைக்கூடங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுகள் மீது உலகத்தோர் கண்கள் அனைத்தும் பதிந்திருக்கின்றன, நமது எதிர்பார்ப்புக்களும் இந்தக் கூடங்கள் மீது அதிகம் இருக்கின்றன.

எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்ற வேண்டும் என்றால், ஆர்வத்தோடுகூட மிகப் பெரிய அளவில் புதுமைகளைக் கண்டுபிடித்தலும் அவசியமாகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மனிதசமுதாயப் பயணம், தொடர்ந்து, புதுமைகளைக் கண்டுபிடித்தல் காரணமாகவே இத்தனை நவீன காலகட்டத்தை அடைந்திருக்கிறது; ஆகையால் இந்தப் பெருந்தொற்றை நாம் வெற்றி கொள்ள வேண்டுமென்றால், அதற்கு இந்தச் சிறப்பான கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய ஆதாரங்கள்.

நண்பர்களே, கொரோனாவுக்கு எதிரான போரின் பாதை மிக நீண்டது. இத்தகைய பெரும் சங்கடத்துக்கு எதிராக உலகத்திடம் எந்த ஒரு சிகிச்சையும் இல்லை என்பதோடு, இதனைப் பற்றிய முன் அனுபவமும் ஏதும் இல்லை. இந்த நிலையில், புதியபுதிய சவால்களும், அவை ஏற்படுத்தும் சிரமங்களும் நம்மை அவதிப்படுத்தி வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் அரங்கேறி வருகிறது, ஆகையால் அந்த வகையில் பாரதம் இதற்கு விதிவிலக்கல்ல. இடர்களையோ, சிரமங்களையோ, கஷ்டங்களையோ அனுபவிக்காத பிரிவினர் என்பது நம்முடைய நாட்டில் இல்லை; நம்முடைய ஏழைகள், தொழிலாளர்கள், கூலிவேலை செய்வோர் ஆகியோர் மீது தான் இந்தப் பெருந்தொற்றின் தாக்கம் அதிகம் படிந்திருக்கிறது.

அவர்களுடைய கஷ்டங்கள், அவர்களின் வலிகள், அவர்களின் துயரங்கள் ஆகியவற்றை சொற்களால் வடிப்பது சாத்தியமாகாது. அவர்களின், அவர்களின் குடும்பங்களின் கஷ்டங்களைப் பற்றி சிந்தித்துக் கலங்காதவர்கள் யார் இருப்பார்கள்? நாமனைவரும் இணைந்து இந்தக் கஷ்டத்தை, இந்தத் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள முயன்று வருகிறோம், நாடு முழுவதும் முயன்று வருகிறது. ரயில்வேயில் பணிபுரியும் நமது நண்பர்கள் இரவுபகலாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், உள்ளாட்சி அமைப்புகளாகட்டும் – அனைவருமே இரவுபகலாகப் பாடுபட்டு வருகிறார்கள். எந்த முறையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களும் ஒரு வகையில் முதல் வரிசையில் போராடிவரும் கொரோனா போராளிகள் தாம்.

இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை, ரயில்களில், பேருந்துகளில், பாதுகாப்பாகக் கொண்டு செல்வது, அவர்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்வது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவது, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என இவையனைத்துப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றன. ஆனால் நண்பர்களே, நாட்டின் கடந்த காலத்தில் நடந்தவை பற்றிய மதிப்பீட்டையும், எதிர்காலத்துக்காக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தையும் நாட்டிலே நம் கண்முன் விரியும் காட்சி நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இன்று நமது உழைப்பாளர்களின் வலியில் நம்மால் நமது கிழக்குப் பகுதியின் வலியைப் பார்க்க முடிகிறது. எந்த கிழக்குப் பகுதியில், தேசத்துக்கான வளர்ச்சி எஞ்ஜினாக ஆகக்கூடிய திறன் இருக்கிறதோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த உழைப்பாளிகளின் உழைப்பு காரணமாகவே புதிய சிகரங்களை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக்கூடிய திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறது, அந்த கிழக்குப் பகுதியின் வளர்ச்சி மிகவும் அவசியமானது.

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியில் தான் நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். சேவை செய்ய எனக்கு நாடு வாய்ப்பளித்ததிலிருந்து, நாங்கள் கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு முதன்மை அளித்தோம். கடந்த ஆண்டுகளில், இந்தத் திசையில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மனநிறைவை அளிக்கிறது; இப்போது புலம்பெயர் தொழிலாளர் களைப் பார்க்கும் வேளையில், மேலும் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. நாம் இந்தத் திசையில் தொடர் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

பல இடங்களில் உழைப்பாளர்களின் திறன் பற்றிய தரவுகள் உருவாக்கம் மீது பணிகள் நடந்து வருகின்றன, பல இடங்களில் ஸ்டார்ட் அப்புகள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன, வேறு இடங்களில் புலம்பெயர் ஆணையம் ஒன்றை உருவாக்குதல் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர, மத்திய அரசு இப்போது மேற்கொண்டிருக்கும் தீர்மானங்கள் காரணமாகவும், கிராமங்களில் வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு, சிறுதொழில்களோடு தொடர்புடைய பரந்துபட்ட சாத்தியக்கூறுகள் ஆகியன விரிந்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்தச் சூழ்நிலைகளுக்கான தீர்வுகளுக்கானவை, சுயசார்பு பாரதத்துக்கானவை; நமது கிராமங்கள், தற்சார்பு உடையனவாகவானால், நமது வட்டாரங்கள், நமது மாவட்டங்கள், நமது மாநிலங்கள் ஆகியன தற்சார்பு உடையனவாகவானால், பல பிரச்சனைகள் இன்று நம் முன்னே வடிவெடுத்திருக்கும் அளவுக்கு உருவாகி இருக்காது.

ஆனால் இருளில் ஒளியை நோக்கி முன்னேறுவது தான் மனிதனின் இயல்பு. அனைத்து சவால்களுக்கும் இடையே எனக்கு மகிழ்ச்சி அளிப்பது என்னவென்றால், தற்சார்பு பாரதம் தொடர்பாக, இன்று நாடு முழுவதிலும் பரவலான வகையில் கருத்தாய்வு நடைபெறத் தொடங்கி விட்டது என்பது தான். மக்கள் இப்போது இந்த இயக்கத்தை தங்களுடையதாக்கிக் கொள்ளத் தலைப்பட்டு விட்டார்கள். இந்த இயக்கத்துக்குத் தலைமையேற்பதை நாட்டுமக்கள் தங்கள் பொறுப்பாக்கிக் கொண்டு வருகிறார்கள். தங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களின் பட்டியலைத் தயார் செய்து விட்டதாக பலர் மேலும் கூறுகிறார்கள்.

இவர்கள் இப்போது இந்த உள்ளூர் பொருட்களையே வாங்கத் தொடங்கி விட்டார்கள், மேலும் vocal for local-உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஊக்கமும் அளித்து வருகிறார்கள். இந்தியாவில் தயாரிப்போம் என்ற உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அவரவர் தங்களுடைய உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பிஹாரைச் சேர்ந்த நம்முடைய நண்பரான ஹிமான்சு அவர்கள், நமோ செயலியில் என்ன எழுதியிருக்கிறார் என்றால், அயல்நாடுகளிலிருந்து நாம் செய்யும் இறக்குமதியின் அளவு குறைந்தபட்சமாக ஆகும் நாளை எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறுகிறார். அது பெட்ரோல், டீசல், எரிபொருள், மின்னணு சாதனங்கள், யூரியா, சமையல் எண்ணை ஆகியவற்றின் இறக்குமதி பற்றி இவர் குறிப்பிடுகிறார். அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நமது நாட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய பல பொருட்களை நாம் இறக்குமதி செய்து வருகிறோம்; இதனால் நமது நாணயமாக வரிசெலுத்துவோரின் பணம் செலவாகிறது.

வரவிருக்கும் ஈராண்டுகளில், தனது மூங்கில் பொருட்களை உலக ப்ராண்டாக ஆக்குவேன் என்று, பெண்களால் தயாரிக்கப்படும் உள்ளூர் மூங்கில் பொருட்களை வியாபாரம் செய்யும் ஆஸாமின் சுதிப் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். தற்சார்பு பாரதம் இயக்கம் இந்தப் பத்தாண்டில் நாட்டை புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வதாக இருக்கும் என்று எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, கொரோனா சங்கடத்தை நாம் சந்தித்து வரும் இந்த வேளையில், நான் உலகநாடுகளின் தலைவர்கள் பலரோடும் பேசினேன்; இது தொடர்பாக நான் ஒரு இரகசியத்தை இன்று உங்களோடு பகிரவிருக்கிறேன். அவர்களுக்கு ஆயுர்வேதம், யோகம் தொடர்பாக ஆர்வம் அதிகரித்திருப்பதை என்னால் இந்த உரையாடல்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. கொரோனா பெருந்தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த காலட்டத்தில் யோகமும், ஆயுர்வேதமும் எப்படி உதவிகரமாக இருக்கும் என்று சில தலைவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள்.

நண்பர்களே, சர்வதேச யோக தினம் விரைவில் வரவிருக்கிறது. யோகக்கலை மக்களின் வாழ்க்கையோடு இணைந்து வருவதைப் பார்க்கும் போது, தங்களுடைய ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் மனங்களில் எந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இப்போது கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், ஹாலிவுட் முதல் ஹரித்வார் வரை, வீட்டிலிருந்தபடியே மக்கள் யோகக்கலை மீது தங்களின் தீவிரமான கவனத்தை செலுத்துவதை நம்மால் காண முடிகிறது.

பல இடங்களில் மக்கள் யோகக்கலை மற்றும் அதோடு கூடவே, ஆயுர்வேதம் பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ளவும், அதன்வழி நிற்கவும் விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. இதுநாள்வரை யோகக்கலை பயிலாதவர்கள் எல்லாம்கூட, இப்போது இணையவழி யோகக்கலை வகுப்புகளோடும், இணையவழி காணொளிகளோடும் தங்களை இணைத்துக் கொண்டு இதைக் கற்று வருகிறார்கள். உண்மையில், யோகக்கலையானது, community, immunity and unity – சமூகம், நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கு மிகச் சிறப்பானது.

நண்பர்களே, கொரோனா சங்கடம் நிலவும் இந்த வேளையில் யோகக்கலை ஏன் மிக முக்கியமானது என்றால், இந்த நோய்க்கிரும் நமது சுவாஸமண்டலத்தை அதிக அளவு பாதிக்கிறது. யோகக் கலையில் இந்த சுவாஸமண்டலத்தை மேலும் பலமடையச் செய்யும் பலவகையான பிராணாயாமங்கள், அதாவது மூச்சுப் பயிற்சிகள் இருக்கின்றன; இவற்றின் ஆதாயத்தை நாம் நீண்ட காலமாகவே கண்டு வருகிறோம்.

இவை காலத்தால் கண்டுணரப்பட்ட உத்திகள், இவற்றுக்கென பிரதெயேகமான மகத்துவம் உண்டு. கபாலபாதி மூச்சுப் பயிற்சியும், அனுலோம்-விலோம் மூச்சுப் பயிற்சியும் பலருக்கு அறிமுகமானதாக இருக்கலாம். ஆனால் பாஸ்த்ரிகா, சீதலீ, ப்ராமரீ போன்ற பல மூச்சுப் பயிற்சிகள் இருக்கின்றன; இவற்றால் பெருமளவு ஆதாயங்கள் உண்டு. இந்த வகையில் ஆயுஷ் அமைச்சகமும் கூட, உங்கள் வாழ்க்கையில் யோகக்கலையின் பங்களிப்பை அதிகப்படுத்த ஒரு வித்தியாசமான வழிமுறையைக் கையாண்டிருக்கிறது.

ஆயுஷ் அமைச்சகம், My Life, My Yoga அதாவது என் வாழ்க்கை, என் யோகக்கலை என்ற பெயரிலான சர்வதேச காணொளி வலைப்பதிவில் யோகக்கலைப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. பாரதம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளலாம். இதில் பங்கெடுத்துக் கொள்ள, நீங்கள் உங்களின் 3 நிமிட காணொளியை தரவேற்றம் செய்ய வேண்டும். இந்தக் காணொளியில் நீங்கள் செய்யும் யோகாஸனத்தின் செயல்முறையில் செய்து காண்பிக்க வேண்டும்; மேலும் யோகக்கலையால் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் கூற வேண்டும். இந்தப் போட்டியில் கண்டிப்பாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள், இந்த புதிய வழிமுறை வாயிலாக, சர்வதேச யோக தினத்தில் நீங்களும் பங்குதாரர்களாக ஆகுங்கள் என்பதே நான் உங்கள் முன்பு வைக்கும் வேண்டுகோள்.

நண்பர்களே, நமது நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள், பல பத்தாண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய கவலையால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் – நோய்வாய்ப்பட்டால் என்னவாகும் என்பது தான் அந்தக் கவலை. நாம் சிகிச்சை எடுத்துக் கொள்வதா, குடும்பத்தாரின் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதா என்ற கவலை. இந்தக் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, இந்தத் துயரத்தைத் துடைக்கவே, சுமார் ஒண்ணரை ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக, ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் பயனாளிகளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டது. ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகள், அதாவது நாட்டின் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சேவை புரியப்பட்டிருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகள் என்றால் அதன் பொருள் என்ன, புரிகிறதா? ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகள் என்றால், நார்வே போன்ற நாடு, சிங்கப்பூர் போன்ற நாடு, இவற்றின் மொத்த மக்கள்தொகையை விடவும் இரண்டு பங்கு அதிகமானோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிறகு, அவர்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தது, இலவச சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அவர்கள் கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய்களை விட அதிகமாக, தங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும் என்பது ஒரு தோராயமான கணக்கு. ஆயுஷ்மான் பாரதம் திட்டம், ஏழைகளின் பணம் செலவாகாமல் இருக்க கைக்கொடுக்கிறது. ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் பயனாளிகளைத் தவிர, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தோடு கூடவே ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம், portability-பெயர்வுத்திறன் வசதியும் கூட. இந்தப் பெயர்வுத்திறன் வசதியானது, நாட்டிலே ஒற்றுமை வண்ணத்தைப் பூச உதவிகரமாக இருக்கிறது.

அதாவது பிஹாரில் ஒரு ஏழை விரும்பினார் என்றால், அவரது மாநிலத்தில் அவருக்குக் கிடைக்கக்கூடிய அதே வசதி கர்நாடகத்திலும் அவருக்குக் கிடைக்கும். இதைப் போலவே, மஹாராஷ்டிரத்தில் இருக்கும் ஒரு ஏழை விருப்பப்பட்டார் என்றால், அவரது மாநிலத்தில் கிடைக்கக் கூடிய அதே வசதி, தமிழ்நாட்டிலும் அவருக்குக் கிடைக்கும். இந்தத் திட்டம் காரணமாக, எந்த ஒரு பகுதியில் உடல்நலச் சேவைகளின் அமைப்பு பலவீனமாக இருக்கிறதோ, அந்த இடங்களைச் சேர்ந்த ஏழைகள், நாட்டின் எந்த ஒரு மூலையில் சிறப்பான சிகிச்சை கிடைத்தாலும், அங்கே தனக்கான சிகிச்சையை செய்து கொள்ள முடியும்.

நண்பர்களே, ஒரு கோடி பயனாளிகளில் 80 சதவீத பயனாளிகள் நாட்டின் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். இவர்களிலும் சுமார் 50 சதவீதப் பயனாளிகள், நமது சகோதரிகள், தாய்மார்கள், பெண் குழதைகள் தாம். இந்தப் பயனாளிகளில் பெரும்பாலானோர், வாடிக்கையான மருந்துகளால் குணமாக்க முடியாத நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எத்தனை பெரிய சங்கடங்களிலிருந்து இவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்!! மணிப்பூர் மாநிலத்தின் சுரா-சாந்த்புரில் ஆறு வயதேயான குழந்தை கேலேன்சாங்க்குக்கும், இதே போன்று ஆயுஷ்மான் பாரதம் திட்டம் வாயிலாக புதிய ஒரு வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை மிகச் சிறிய வயதில் கேலேன்லாங்கின் மூளையில் நோய்வாய்ப்பட்டிருந்தது.

இந்தக் குழந்தையின் தகப்பனார் தினப்படிகூலி வேலை பார்ப்பவர், தாயாரோ தையல்வேலை செய்பவர். இந்த நிலையில் குழந்தைக்கு சிகிச்சை பார்ப்பது மிகவும் கடினமானதாக இருந்து வந்தது. ஆனால் ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தால் இப்போது அவரது மகனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற அனுபவத்தை நம்மால் புதுச்சேரியைச் சேர்ந்த அமிர்தவல்லியிடமும் காணலாம். இவர் விஷயத்திலும் ஆயுஷ்மான் பாரதம் திட்டம் சங்கடம் தீர்க்கும் சகாயத் திட்டமாக மலர்ந்திருக்கிறது. அமிர்தவல்லி அவர்களின் கணவர் துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பால் காலமாகி விட்டார்.

அவர்களுடைய 27 வயது நிரம்பிய மகனான ஜீவாவுக்கும் இருதய நோய் கண்டிருந்தது. அவ்ருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் தினக்கூலி வேலை பார்த்துவரும் ஜீவாவால் தனது பணத்தின் மூலம் இத்தனை பெரிய செலவு செயது அறுவைசிகிச்சை செய்வது என்பது சாத்தியமானதாக இல்லை. தாய் அமிர்தவல்லியோ தன் மகனை கைவிடுவதாக இல்லை, அவரை ஆயூஷ்மான் பாரதம் திட்டத்தில் பதிவு செய்தார், அடுத்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு அறுவைசிகிச்சை நடந்து முடிந்தது.
நண்பர்களே, நான் உங்களுக்கு வெறும் இரண்டு சம்பவங்களை மட்டுமே எடுத்துக் கூறியிருக்கிறேன்.

ஆயுஷ்மான் பாரதத்தோடு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இப்படிப்பட்ட சம்பவங்கள்-சிகிச்சைகள் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் தற்போது வாழ்ந்துவரும், உயிர்ப்புடைய மனிதர்கள் பற்றியவை, துயரங்களிலிருந்தும், நோவின் வலிகளிலிருந்தும் விடுதலை அடைந்த நமது அன்புச் சொந்தங்கள் பற்றியன. உங்களுக்கு நேரம் வாய்க்கும் போது, எப்போதாவது இந்தத் திட்டம் வாயிலாக சிகிச்சை அடைந்த ஏதாவது ஒரு நபரைச் சந்தியுங்கள் என்று நான் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு ஏழை நோயிலிருந்து வெளியேறுகிறார் எனும் போது, தன் ஏழமையோடு போராடக்கூடிய நெஞ்சுரமும், தெம்பும், தன்னம்பிக்கையும் அவரிடத்தில் தாமே மலர்கின்றன. இந்த ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தினால் எந்த ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதோ, எந்த ஏழைகளின் வாழ்விலே வசந்தம் வீசத் தொடங்கியதோ, யாருக்குத் தன்னிறைவு உண்டானதோ, இந்த அனைத்துப் புண்ணிய செயல்களுக்கும் முழுமுதல் சொந்தக்காரர்கள் என்றால் அவர்கள் நமது நாட்டின் நாணயமான வரிசெலுத்துவோர் தாம்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒருபுறம் நாம் பெருந்தொற்றோடு போர் புரிந்து வருகிறோம் என்றால், மறுபுறம் பார்த்தால் கிழக்கு இந்தியாவின் சில பாகங்களில் இயற்கைச் சீற்றம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அவலம். கடந்த சில வாரங்களில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் சூப்பர் புயலான அம்ஃபானின் கோரத்தாண்டவத்தை நாம் காண நேரிட்டது. இந்தச் சூறாவளியானது பலருடைய வீடுகளைத் தரைமட்டமாக்கி விட்டது. விவசாயிகளும் பெரிய இழப்பை அடைந்தார்கள்.

நிலைமையை ஆய்வு செய்ய நான் கடந்த வாரம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் சென்றிருந்தேன். இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சீர்கெட்டிருந்த நிலையை தைரியத்தோடும், நெஞ்சுரத்தோடும் எதிர்கொண்டதைப் பார்த்த போது, அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சங்கடமான இந்தத் தருணத்தில், முழுவதும் பாதிக்கப்பட்ட இந்த மாநிலங்களின் மக்களுக்கு தேசம் அனைத்து வகைகளிலும் துணையாக நிற்கிறது.

நண்பர்களே, ஒரு புறம் கிழக்கு பாரதம் பயங்கர சூறாவளியை எதிர்கொள்ள நேர்ந்தது என்றால், மறுபுறமோ நாட்டின் பல பாகங்களில் வெட்டுக்கிளிகளின் பயங்கரத் தாக்குதல். இந்தச் சின்னஞ்சிறிய உயிரினமானது எத்தனை பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தவல்லது என்பதை இந்த வெட்டுக்கிளித் தாக்குதல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

வெட்டுக்கிளிப் படையின் படுபயங்கரத் தாக்குதல் பலநாட்கள் வரை நீடிக்கக்கூடியது, மிகப்பெரிய பகுதியின் மீது இதன் தாக்கம் ஏற்படுகிறது. இந்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், விவசாயத் துறையாகட்டும், நிர்வாகம் இந்தச் சங்கடத்திலிருந்து தப்ப, விவசாயிகளுக்கு உதவிகள் செய்யும் வகையில், நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றார்கள். புதிய புதிய கண்டுபிடிப்பு களை நோக்கி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. நாமனைவரும் இணைந்து நமது விவசாயத்துறையை பாதித்திருக்கும் இந்தச் சங்கடத்தை எதிர்கொள்வோம், ஆதாரங்களைப் பாதுகாப்போம்.

எனதருமை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்க இருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பாக இந்த ஆண்டின் மையக்கருத்து என்னவென்றால், Bio Diversity அதாவது உயிர் பன்முகத்தன்மை. தற்போதைய சூழ்நிலையில் இந்த மையக்கருத்து சிறப்பான வகையிலே மகத்துவம் வாய்ந்தது. ஊரடங்கு காலத்தில் கடந்த சில வாரங்களில் வாழ்க்கையின் வேகத்தில் சற்றே நிதானம் ஏற்பட்டது. என்றாலும், நமது அருகிலுள்ள, இயற்கைவளமும், வகைகள் பலவும் உடைய, உயிர் பன்முகத்தன்மையை அருகிலிருந்து பார்க்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்தது.

சுற்றுச்சூழல் மாசு, ஒலிமாசு ஆகியவை நிரம்பியிருந்த உலகில் காணாமல் போயிருந்த பல புள்ளினங்களின் கீச்சொலியை, பல ஆண்டுகள் கழித்து மக்களால் தங்கள் வீடுகளில் கேட்க முடிந்தது. பல இடங்களில் விலங்கினங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக என்னைப் போலவே நீங்களும் சமூக ஊடகங்களில் இந்தச் செய்திகளைக் கண்டிருப்பீர்கள், இவை பற்றிப் படித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் இல்லங்களிலிருந்தே வெகு தொலைவில் இருக்கும் மலைகளைத் தங்களால் பார்க்க முடிகிறது என்றும், தொலைவில் ஒளிரும் ஒளியைக் காண முடிகிறது என்றும் பலர் எழுதி வருகிறார்கள், கூறி வருகிறார்கள், படங்களை தரவேற்றம் செய்து வருகிறார்கள்.

இந்தப் படங்களைப் பார்க்கும் போது, இந்தக் காட்சிகளை நம்மால் அப்படியே பாதுகாக்க முடியும் என்ற மனவுறுதி பலர் மனங்களில் ஏற்படுகிறது. இந்தப் படங்கள் இயற்கையின் பொருட்டு ஆக்கப்பூர்வமான ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை நம்முள் நிரப்புகிறது. நதிகள் என்றும் நிர்மலமாக இருக்க வேண்டும், புள்ளினங்களுக்கும், விலங்கினங்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை வாய்க்கப் பெறவேண்டும், வான் மண்டலமும் மாசில்லாமல் தூய்மையே உருவாக ஆக வேண்டும், இதன் பொருட்டு நாம் இயற்கையோடு இசைவாக நம் வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நீர் இருந்தால் வாழ்வுண்டு, நீர் இருந்தால் தான் நாளையுண்டு என்பதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். ஆனால் நீர் விஷயத்தில் நமக்கு பொறுப்பும் உண்டு. மழை நீரை நாம் சேமிக்க வேண்டும், ஒவ்வொரு சொட்டு நீரையும் பராமரிக்க வேண்டும்.

கிராமந்தோறும் மழை நீரை நாம் எப்படி சேமிப்பது? பாரம்பரியமான பல எளிய உபாயங்கள் உண்டு; இந்த எளிய உபாயங்களாலும் நாம் நீரைத் தக்க வைத்துக் கொள்ள இயலும். 5-6 நாட்கள் கூட, நீர் தங்கினால், பூமித்தாயின் தாகம் தணியும், நிலத்தை நீர் வளமாக்கும், அது வாழ்வின் சக்தியாக மிளிரும்; ஆகையால் இந்த மழைக்காலத்தில் நாம் அனைவரும் நீரை சேமிக்க வேண்டும், அதைப் பராமரிக்க வேண்டும் என்பதே நமது முழு முயற்சியாக இருக்க வேண்டும்.

எனதருமை நாட்டுமக்களே, தூய்மையான சுற்றுச்சூழல் நமது வாழ்க்கை, நமது குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவை தொடர்பானது. ஆகையால் நாம் தனிப்பட்ட முறையிலும் கூட இதனைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த சுற்றுச்சூழல் தினத்தன்று, சில மரங்களைக் கண்டிப்பாக நீங்கள் நட வேண்டும், இயற்கைக்கு சேவை புரிய, இப்படிப்பட்ட சில உறுதிப்பாடுகளை கண்டிப்பாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும், இதன் வாயிலாக இயற்கையுடனான உங்கள் உறவு ஒவ்வொரு நாளும் அமைந்திருக்க வேண்டும் என்று நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வெப்பம் அதிகரித்து வருகிறது, பறவைகளுக்கு நீர்வார்க்கும் ஏற்பாடுகளை மறந்து விடாதீர்கள்.

நண்பர்களே, இத்தனை கடினமான முனைப்பிற்குப் பிறகு, இத்தனை சிரமங்களைத் தாண்டி, நிலைமையை நாடு எந்த வகையில் சமாளித்திருக் கிறதோ, அதை சீர்கேடு அடைய விடக் கூடாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் இந்தப் போரை பலவீனமாக விடக்கூடாது. நாம் கவனக் குறைவாக இருப்பது, எச்சரிக்கை உணர்வைத் துறப்பது ஆகியவற்றுக்கு இடமே கொடுக்கக் கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் கூட மிகவும் தீவிரமானது.

உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தாருக்கோ இதனால் பயங்கரமான பாதிப்பு ஏற்படலாம். நாம், ஒவ்வொரு மனிதனின் உயிரையும் பாதுகாக்க வேண்டும்; ஆகையால் ஒரு மீட்டர் இடைவெளி, முகத்தில் முகக்கவசம், கைகளைக் கழுவுதல் ஆகிய இந்த முன்னெச்சரிக்கைகளை, இதுவரை நாம் செய்ததைப் போலவே செய்து வரவேண்டும். நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் உற்றாருக்காகவும், நமது நாட்டுக்காகவும் இந்த முன்னெச்சரிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இந்த நம்பிக்கையோடும், உங்களின் ஆரோக்கியத்துக்காகவும் என் தரப்பிலிருந்து இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அடுத்த மாதம், மீண்டும் ஒருமுறை, மனதின் குரலில் பல புதிய விஷயங்கள், செய்திகளோடு உங்களைக் கண்டிப்பாக வந்து சந்திக்கிறேன். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe