
வாஷிங்டன்:
இந்தியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரான முகமது ஷபி அர்மானை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் நபராக இவர் திகழ்கிறார்.
கர்நாடக மாநிலம் பக்தல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் முகமது ஷபி மீது இன்டர்போல் போலீசாரின் ரெட் கார்னர் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இவருக்கு அமெரிக்கா தடை விதித்தது. இங்கே இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் துவங்கியதும், ஷபி அர்மர் தனது சகோதரருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருந்த ஷபி, பேஸ்புக் மூலம் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆட்களைச் சேர்த்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்த போது, முகமது ஷபியின் ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்பு வெளியில் வந்தது.. இதையடுத்து என்.ஐ.ஏ., போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்தியா, சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் முகமது ஷபியை சேர்க்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் குழுவின் தலைவராக முகமது ஷபி அர்மர் செயல்பட்டார். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஐ.எஸ்.ஐஎஸ், ஆதரவாளர்களைத் தூண்டினார். இதற்காக ஆள் சேர்த்தல், ஆயுதங்கள் வாங்குதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளது.



