
புது தில்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜக.,வின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் ராம்நாத் கோவிந்த். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் மோடி உள்பட, 20 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்த அவருக்கு, பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு 17 கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் இத்தேர்தல் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலா 50 பேர் முன்மொழியவும், வழி மொழியவும் வேண்டும். அதற்கேற்ப முன்மொழிவோர், வழிமொழிவோர் என 4 குழுக்களாக பா.ஜ.க. தலைமை பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிலும் தலா 60 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர்.
பா.ஜ.க. குழுக்களில் இடம் பெற்றிருந்த அனைவரும் நேற்று தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, இன்று காலை நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வந்ததும், வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தொடங்கியது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான நாடாளுமன்ற தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்களின் மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கான முதல் குழுவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கட்சித் தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 2-வது குழுவினரும் மனுக்களை கொடுத்தனர். மூன்றாவது குழுவில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவரை வழிமொழிவதற்கான 4வது குழுவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இவ்வாறு 4 குழுக்களாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு கை குலுக்கியும், மலர் கொத்துகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தக் குழுக்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 20 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் முதல்வர் மெகபூபா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் பிஜு ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம், அடுத்த மாதம் 24ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த மாதம் 17ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28ஆம் தேதி முடிவடைகிறது.
பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு பாஜக., கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. முன்னதாக, ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, உடன் இருக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று தில்லி சென்றார்.



