
நாகர்கோயில்:
கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.
கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதன். இவருக்கும், திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்தை குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரகோவிலில் உள்ள முருகன் கோவிலில் வைத்து நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று காலை 9.40 க்கு இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. முருகனை வழிபட்ட பின்னர், கோவில் முன் உள்ள மண்டபத்தில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார். எம்.எல்.ஏ சபரிநாதன் திருமாங்கல்யத்தை திவ்யா எஸ். அய்யர் கழுத்தில் கட்டினார்.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் மணமக்கள் இருவரும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றனர். இன்று மாலை திருவனந்தபுரம் நாலாஞ்சிரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
கேரள முன்னாள் சபாநாயகர் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், மும்பையில் ஒரு நிறுவனத்தில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். கார்த்திகேயன் திடீரென மரணம் அடைந்ததால், காலியான அருவிக்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சபரிநாதன் அதன் பின்னர் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ. ஆன பின்னர் தொகுதி பிரச்னைக்காக திருவனந்தபுரம் சப்-கலெக்டர் திவ்யா எஸ். அய்யரை சந்தித்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணம் நடந்துள்ளது.
எம்.எல்.ஏ., சபரிநாதன் தனது திருமணத்தைக் குறித்துக் கூறியபோது, ஜூன் 30-ந் தேதியான இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனது திருமணம் இன்று நடந்தது போல ஜூன் 30-ந் தேதி தான் நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டேன். அதனால் இந்த 30-ந் தேதியை என்னால் மறக்க முடியாது. நாங்கள் இருவரும் காதலித்தபோது முருகன்- வள்ளியுடன் குடிகொண்டிருக்கும் கோவலில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அது பெற்றோர் விருப்பம் மக்களின் அன்பு ஆகியவற்றால் இன்று நிறைவேறி உள்ளது. இதற்காக எங்களோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சபரிநாதனுடன் மலர்ந்த காதல் குறித்து திவ்யா எஸ். அய்யர் கூறியபோது, சபரிநாதன் என்னுடன் அலுவல் ரீதியாக பேசினார். அதன் பிறகு இருவரும் எங்களின் தனிப்பட்ட விருப்பங்களை பேசிக் கொண்டோம். அப்போது எனக்கு விருப்பமான இசை, சினிமா, புத்தகம் படித்தல் போன்றவற்றில் அவரும் ஆர்வமாக இருப்பதை அறிந்தேன். அந்த ஆர்வம் அவர் மீது காதலாக மாறியது. அதன்பின் அவரை சந்திக்க வெட்கமாக இருந்தது. அப்போது நான், கல்லூரி பருவத்தை நினைத்துக் கொண்டேன். இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கிறது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்ததும் மனம் மகிழ்ச்சி கொண்டது” என்றார்.


