
எங்கும் நிறைந்துள்ள அநீதிகளால், நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனும் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை டிவிட் செய்து, ரூபா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி, லஞ்சம் பெற்றுக் கொண்டு சலுகைகளை செய்து கொடுத்துள்ளார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் தெரிவித்தார். இதை அடுத்து, அவர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். அதே நேரம் சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் தெரிவித்த சிறைக் கைதிகளை, கொடூரமாகத் தாக்கி போலீஸார் தங்கள் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர். இது விசாரணை அளவில் இருக்கிறது.
மேலும் சிறையில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விசாரணைக் குழுவோ, பேருக்கு மந்தமாக வேலையைச் செய்து வருகிறது. ஆகவே, விசாரணைக் குழு என்பது, குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக மாநில அரசு மேற்கொள்ளும் கண்துடைப்பு நாடகம் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூபாவின் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. புதுவை மாநில துணை நிலை ஆளுநரான கிரன் பேடி, ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டிவிட்டரில் பதிவிட்டார். அவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள ரூபா, தான் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று முதல்கட்ட விசாரணையில் அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ரூபா நாசூக்காகத் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் பதிவில், மனித உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், எங்கும் பரவியிருக்கும் அநீதிகளால், எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல் இருக்கும்- என்ற பொன்மொழியைப் பதிவிட்டு, தனக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்ததை ஏற்க மறுத்துள்ள அரசு, தன்னை இடமாற்றம் செய்து அநீதி இழைத்துள்ளது என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாகவே தற்போதைய சூழலில் கருத முடிகிறது.
— D Roopa IPS (@D_Roopa_IPS) July 18, 2017



