
புது தில்லி:
புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க் கிழமை நாளை பதவி ஏற்கவுள்ளார். எனவே குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறி பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார். அவர் தில்லி ராஜாஜி மார்க் பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10ஆம் எண் கொண்ட அரசு பங்களாவில் குடியேறுகிறார். 11,776 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா தற்போது வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பங்களாவின் முன்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி புத்தக பிரியர் என்பதால், அதிக இட வசதியுடன் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்த பங்களாவில் குடியேறி வசித்து வந்தார். 2015ஆம் ஆண்டு மரணம் அடையும் வரை அவர் அங்குதான் தங்கியிருந்தார். பின்பு இந்த பங்களா மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி இங்கு குடிவருவதால் மகேஷ் சர்மா தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அக்பர் சாலை 10ஆம் எண் இல்லத்தில் குடியேறுகிறார்.
81 வயது பிரணாப் முகர்ஜிக்கு சிகரெட் பைப் பிடிக்கும் பழக்கம் நீண்டகாலமாக இருந்துவந்தது. உடல் நலம் கருதி மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டதால் இப்போது நிறுத்திவிட்டார். என்றாலும், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த 500க்கும் மேற்பட்ட சிகரெட் பைப்புகளை சேகரித்து வைத்திருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவதால் அவற்றை அங்குள்ள அருங்காட்சியகத்தில் அவர் ஒப்படைத்தார்.
இன்று குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் கடைசி தினம் என்பதால் மாலை தூர்தர்ஷனில் உரையாற்றுகிறார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் 1982-1984ல் நிதி அமைச்சராக பதவி வகித்து, அவரது நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். இந்திராவின் மறைவுக்குப் பிறகு, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோருடைய அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர். வெளியுறவு, ராணுவ அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.



