
பாட்னா:
ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ்வை, பதவி விலகக் கேட்டுக் கொண்டும் அவர் பதவி விலகாததை அடுத்து, திடீர் திருப்பமாக தனது முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். இதை அடுத்து, அவரே ஒரு கொலைக் குற்றவாளிதான் என லாலு பிரசாத் யாதவ் அவர் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
நாடெங்கும் மோடி அலை வீசிய 2015ல், பாஜக கணிசமாக வெற்றின்பெறும் என்ற கணிப்புகள் உலவிய நிலையில், பாஜக.,வை தோற்கடிக்க, 2015 பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை உருவாக்கின. அந்தத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐ.ஜ.த 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர். இந்தக் கூட்டணிக்கு அல்ப ஆயுசுதான் என்று கருதிய நிலையில், பலரது கணிப்புகளையும் மீறி, கூட்டணி நீடிக்கவே செய்தது.
இந்நிலையில்தான், ரயில்வேக்கு சொந்தமான ஹோட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூலை 7ஆம் தேதி சோதனை நடத்தினர். முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த முதல் தகவல் அறிக்கையில், பீகார் மாநில துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றது.
லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை வளையத்துக்குள் சிக்கியது அக்கட்சிக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. எதிர்க்கட்சியான பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வலியுறுத்தின. அப்போது நிதிஷ் குமார் அமைதியாக இருந்தார். ராஜினாமா செய்யுமாறு நான் யாரையும் வற்புறுத்தவில்லை, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம்தான் கோரப்பட்டது என நிதிஷ் கூறினார். இந்நிலையில் நெருக்கடி முற்றவே, தேஜஸ்வி விரைவில் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு, ஜூலை 14ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய மாட்டார் என்றே லாலு கூறிவந்தார். இந்நிலையில், சோனியா, ராகுல் உள்ளிட்டோர், பிரச்சனையை சரிசெய்ய முயற்சித்தார்கள். இந்த விஷயத்தில் அமைதி காக்க வேண்டும் என்று நிதிஷையும் லாலுவையும் கேட்டுக் கொண்டார்கள். இதை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தேஜஸ்வி ராஜினாமா குறித்து ஒரு முடிவு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.
ஆனால், அதன் பின்பும் அமைதி நிலவியது. இந்நிலையில் தனது கட்சியினருடன் இன்று லாலு பிரசாத் யாதவ் சிறப்பு ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் துணை முதல்வராக உள்ள தேஜஸ்வி யாதவ் பதவி விலகமாட்டார் என்று தெரிவித்தார். “மிகவும் சிரமப்பட்டு இந்தக் கூட்டணியை உருவாக்கினோம். எங்களுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே எந்த மனக் கசப்பும் இல்லை. நான் நிதிஷுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். எங்கள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. நான்தான் நிதிஷ் குமாரை முதல்வராக ஆக்கினேன். அப்படி இருக்க, நான் ஏன் அவரது ஆட்சியை சீர்குலைக்கப் போகிறேன்?” என்று கேள்வி எழுப்பினார் லாலு பிரசாத் யாதவ்.
இந்நிலையில் பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. பீகார் மாநில ஆளுநர் கேஎன் திரிபாதி இன்று மாலை கொல்கத்தா செல்ல இருந்தார். ஆனால் அப்படி அவர் ஏதும் கொல்கத்தாவுக்குச் செல்லவில்லை. இதையடுத்து நிதிஷ் குமார், ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றார். அங்கே ஆளுநரிடம் தன் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார். அமைச்சரவை உறுப்பினர்களும் விரைவில் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் எனக் கூறப்பட்டது.
இதை அடுத்து, பாஜக.,வை தடுப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டு துவங்கப் பட்ட மெகா கூட்டணியான ஜக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இந்தக் கூட்டணி இப்போது உடைந்துள்ளது.
நிதிஷின் முடிவால் அதிர்ச்சி அடைந்த லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், நிதிஷ் குமார் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். நிதிஷ் குமார் எந்த ஒரு ராஜினாமாவையும் கோரவில்லை. வழக்கறிஞர் ஆலோசனைப்படி தேஜஸ்வி மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் நான் பேச மாட்டேன். பாஜக.,வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்துள்ளார். நிதிஷ் குமாருக்கு தெரியும், அவரே கொலை வழக்குக் குற்றவாளி என்று! கொலை மற்றும் ஆயுத வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் முதல்வர் நிதிஷ் குமார். நிதிஷ் குமாருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். புதிய தலைவரைத் தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். நிதிஷுக்கு இதில் விருப்பமில்லை என்றால் அவர் ஏற்கெனவே பாஜக.,வுடன் இணையத் திட்டமிட்டுவிட்டார் என்பதை நிரூபித்துவிட்டது போலாகிவிடும் என்று கூறினார்.
ஊடகங்களிடம் பேசிய லாலு பிரசாத், பிறகு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மகா கூட்டணியின் கருவை சிதைத்துவிட்டார் நிதீஷ் என்று குற்றம் சாட்டினார்.
When Nitish Kumar broke alliance with BJP in 2013 he choreographed & followed the same script to secure himself. He surrenders as per needs
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) July 26, 2017
இந்நிலையில், நிதிஷின் முடிவுக்கு பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார்.
भ्रष्टाचार के ख़िलाफ़ लड़ाई में जुड़ने के लिए नीतीश कुमार जी को बहुत-बहुत बधाई।
सवा सौ करोड़ नागरिक ईमानदारी का स्वागत और समर्थन कर रहे हैं— Narendra Modi (@narendramodi) July 26, 2017
देश के, विशेष रूप से बिहार के उज्जवल भविष्य के लिए राजनीतिक मतभेदों से ऊपर उठकर भ्रष्टाचार के ख़िलाफ़ एक होकर लड़ना,आज देश और समय की माँग है
— Narendra Modi (@narendramodi) July 26, 2017
நாட்டின் 1.25 கோடி மக்கள் நிதிஷின் நேர்மையைப் பாராட்டுவதாகவும், ஊழலுக்கு எதிராக போராடும் நிதிஷுக்கு தனது பாராட்டையும் கூறினார். மோடியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து நிதிஷும் டிவிட்டரில் செய்தி அளித்தார்.
हमने जो निर्णय लिया उसपर माननीय प्रधानमंत्री @narendramodi के ट्वीट के द्वारा दी गई प्रतिक्रिया के लिए उन्हें तहेदिल से धन्यवाद.
— Nitish Kumar (@NitishKumar) July 26, 2017
இதை அடுத்து, நிதிஷ் குமாருக்கு பாஜக.,வினர் ஆதரவு அளித்து நிதிஷ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று சில தகவல்கள் உலவின. இதனிடையே, தனக்கு காது, மூக்கு, தொண்டை தொடர்பாக உடல் நலம் சரியில்லை என்று கூறி, ஆளுநர் கே.என்.திரிபாதி, பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட் மருத்துவமனையின் ஈஎன்டி சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டார்.
இதனிடையே “நிதீஷ்குமாருக்கு ஆதரவளிக்கும் முடிவை அவரிடம் தெரிவித்துவிட்டோம். விரைவில் மாநில ஆளுனரை சந்தித்து தகவல் தெரிவிப்போம்” என்று பீகார் மாநில பாஜக., தலைவர் சுஷீல்குமார் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பீகார் அரசியலில் புயல் வீசிய மெகா கூட்டணி, இரு வருடங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் குமார் எங்கள் இயல்பான கூட்டாளி என்று தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வந்ததுபோல், மீண்டும் தே.ஜ.கூட்டணிக்கு செல்கிறார் நிதிஷ்.
Bihar: Meeting of BJP-JDU MLAs & leaders at Nitish Kumar's residence in Patna. pic.twitter.com/CjgPKNmEXV
— ANI (@ANI_news) July 26, 2017
புதன்கிழமை இன்று பின்னிரவு நேரத்தில் பாஜக., ஐ.ஜ.த கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில், பாஜக., நிதிஷுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறப்பட்டது. இதை அடுத்து, நிதிஷ் குமார், பாஜக., உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் என்று கூறப்பட்டது. பின்னர் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஆளுநரும் தம் கொல்கத்தா பயணத்தை ரத்து செய்து, பாட்னாவிலேயே தங்கியுள்ளார் என்றும், உடல் நலன் சரியில்லை என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு, மீண்டும் ஆளுநர் மாளிகை நோக்கி இன்று இரவே திரும்பிவிட்டார் என்றும் பேசப்படுகிறது.



