
இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா கோடை முதல் சீசன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிவருகிறது.
மலைகளின் அரசியாகக் கருதப்படும் ஊட்டிக்கு எல்லா காலங்களிலும் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் நடைபெறும் கோடைக்கால சீசனை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடத்தப்படும்.
அதன்படி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்கூட்டியே மலர் செடிகள் நடவுப் பணிகள்
நடைபெற்று பல நாட்டு மலர் விதைகள் விதைக்கப்படும். பின்னர் சிறப்பாக நடைபெறும்
மலர் கண்காட்சியை, பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுரசிப்பது வழக்கம்.
இந்தக் கோடை முதல் சீசனுக்குப் பிறகு, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில்
இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் அரசு தாவரவியல் பூங்கா உள்பட
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் சுத்தப்படுத்தும் மற்றும்
மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் சிசனுக்காக
தாவரவியல் பூங்காவில் புதிய மலர் நாற்று உற்பத்தி செய்யும் பணிகள்
முடிவடைந்து, ஒருசில தினங்களில் நடவு பணிகள் தொடங்கவுள்ளன. கிட்டத்தட்ட
ஏழாயிரம் புதிய மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்படவிருக்கின்றன.
மேலும், நன்றாக வளர்ந்த மலர் செடிகளில் களைகள் அகற்றும் பணிகளும்
நடைபெற்றுவருகின்றன. தற்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால், முதல் சீசனைப்
போலவே இரண்டாவது சீசனுக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.



