
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரமானது திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது வன்முறை வெடிக்கலாம் என முன் கூட்டியே பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் படைகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் வன்முறை பெருமளவில் வெடித்துள்ளது.
வன்முறைகாரர்களை விரட்ட பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தை ஒட்டிய பகுதியிலும் வன்முறை வெடித்துள்ளது. பஞ்ச்குலாவில் ராம் ரஹீம் ஆதரவாளர்களை விரட்ட பாதுகாப்பு படைகள் தெருவில் இறங்கினர். பல பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல இடங்களில் செய்தியாளர்களின் ஊடக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊடகத்தினருக்கு சரமாரியாக அடி விழுந்தது. மாண்சாவில் இரு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் பொதுமக்கள் அமைதியாக இருக்க கோரிக்கை விடுத்துள்ளார். சிர்சாவிலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
குர்மீத் ராம் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் தீ பிடித்து எரியும் புகையுடன் கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்மீத் ராம் ரோக்தாக் சிறைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்.
இதனிடையே இந்தக் கலவரங்களில் சுமார் 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தை உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டினார். அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட அவர், ராணுவத்தை அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதை அடுத்து ராணுவம் அனுப்பப் பட்டது.



