லடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ., அருணாசலில் 90 ஆயிரம் ச.கி.மீ.,: சீன ஆக்கிரமிப்பு குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rajnath-singh-in-rajyasabha
rajnath-singh-in-rajyasabha

லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைச் சீனா தொடர்ந்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது! அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர  கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்துக்கு உரிமை கோரி வருகிறது என்று, நாடாளுமன்ற மாநிலங்களைவியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர், கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15 அன்று இந்திய நிலப் பகுதியை பாதுகாப்பதற்காக நிகழ்ந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளது குறித்து குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களை ஊக்கப் படுத்தும் வகையில், லடாக் எல்லைக்கே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்று வந்தது குறித்தும் குறிப்பிட்டார்.  

சீன ஆக்கிரமிப்பு குறித்து குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், லடாக்கில் 38 ஆயிரம் சதுர  கிலோ மீட்டர் நிலப்பரப்பு தொடர்ந்து சீன ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்றும்,  பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை  அது சீனாவுக்குக் கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வடகிழக்கில், அருணாசலப் பிரதேசத்தில் 90ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை  சீனா  தனக்கு உரியது என்று உரிமை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்த ராஜ்நாத் சிங்,  சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்களின்போது இந்திய ராணுவத்தினர் பொறுமை காப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நமது ராணுவ வீரர்கள்,  நமது நிலப்பரப்பைக் காக்க வேண்டிய நேரத்தில்,  துணிச்சலுடன் போரிடுகின்றனர் என்று கூறினார். 

நமது நாட்டின் எல்லையைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தில் எவரும் எள்ளளவும் ஐயம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 

நமது நாட்டின் எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு நாடுகளும் செய்து கொண்டுள்ள உடன்பாடுகளை 2003ஆம் ஆண்டுக்குப் பின் சீனா மதிக்கவில்லை … சீனாவின் செயல், இருநாட்டு ஒப்பந்தங்களை அந்நாடு மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. சீன ராணுவத்தின் நடவடிக்கை 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களுக்கு எதிரானது. எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை இரு நாடுகளும் மதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களை நமது ராணுவம் உறுதியாக மதிக்கிறது. ஆனால், சீன தரப்பு அதனை பின்பற்றவில்லை.

எல்லை பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அங்கே தமது  ராணுவத்தையும் குவித்து வருகிறது. எனவே, நமது பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு பட்ஜெட்டில் இரு மடங்கு நிதி ஒதுக்கியது.

தற்போதைய சூழ்நிலையை அமைதியாக தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த சவாலையும் சந்திக்க, தயாராக உள்ளோம். நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விட மாட்டோம்.. என்று உறுதி படக் கூறினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.