
பீஹாரில் வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இன்று திறந்து வைக்கிறார்.
பீஹாரில் கோசி ஆற்றின் குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்துக்கு 2003 – 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முடிவடைந்துள்ளன.
தற்போது, இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த பாலம் திகழ்கிறது.
பீஹாரின் வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது இந்த நிகழ்வு. இது, 86 ஆண்டுகால பீகார் மக்களின் கனவு. அந்தக் கனவு இன்று நிறைவேறுகிறது என்று கூறப்படுகிறது. இதனுடன், மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று அறிமுகப் படுத்துகிறார்.

1887 ஆம் ஆண்டில், நிர்மாலி மற்றும் பாப்தியாஹி (சரைகர்) இடையே ஒரு மீட்டர் கேஜ் ரயில் பாதை இணைப்பு கட்டப்பட்டது. 1934 ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் கடுமையான இந்தோ நேபாள பூகம்பத்தின் போது, ரயில் இணைப்பு சிதைந்து போனது. அதன் பின்னர் கோசி நதியின் இயல்பான தன்மை காரணமாக இந்த ரயில் இணைப்பை நீண்ட காலத்திற்கு புனரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் பின்னர், கோசி மெகா பிரிட்ஜ் லைன் திட்டத்துக்கு 2003-04 ஆம் ஆண்டில் இந்திய அரசு அனுமதி அளித்தது. கோசி ரயில் மெகா பாலம், பீகார் வரலாற்றில் முக்கியமானது. முழு பிராந்தியமும் வடகிழக்குடன் இணைக்கும் மெகா பாலம் இது. இந்திய-நேபாள எல்லையில் அமைந்திருக்கும் இது இதன் மூலம் முக்கியத்துவம் பெறுகிறது.
பீஹாரில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை ஒட்டி பீகார் மக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ஜாக்பாட் பரிசாக அறிவிக்கப் பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.