
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
1946ல் பீஹாரின் ககாரியா மாவட்டத்தில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான், 8 முறை எம்.பி.யாக இருந்தார். 2000ஆம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கினார். தற்போது வரை அதன் தலைவராக இருந்து வருகிறார்.
ராம் விலாஸ் பஸ்வான், கடந்த ஒரு மாத காலமாகவே உடல் நலம் குன்றிய நிலையில் ஓய்வில் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவ மனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் 8ஆம் தேதி இன்று அவர் திடீரென மரணம் அடைந்ததாக, அவரது மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் கூறினார்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பீஹார் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு அவரது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



