கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவி என்ற கிராமத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மிகச் சிறந்த வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா என பல்வேறு காரணங்களால் புகழப்படும் இந்த கிராமம் தற்போது மற்றொரு காரணத்துக்காகவும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளது.
இங்கு 163 பழங்குடியினர்களுடன் சேர்த்து 1000 கிராமத்தினர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள். இந்த கிராமம் குறித்து அருகே உள்ள சீதாதோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜே. வின்சென்ட் ஸேவியர் கூறுகையில், இங்கிருக்கும் மக்கள் அனைவருமே கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.
அனைவரும் சரியாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சிறப்பாக செய்கிறார்கள். அவர்கள் நகரப் பகுதிக்குச் செல்வதும் இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் வாரந்தோறும் இந்த கிராமத்துக்குச் சென்று பரிசோதனை செய்வோம், தற்போதைய நிலையில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்கிறார்.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திரகுமார் கூறுகையில், நாட்டிலோ, மாநிலத்தியே தற்போதைய கொரோனா பெருந்தொற்று பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு தொலைக்காட்சி இல்லை. இங்கு தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் செல்லிடப்பேசியும் கிடையாது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தான் எங்களுக்கு கரோனா பற்றி எடுத்துக் கூறி வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினர். நாங்களும் அதனை சரியாகப் பின்பற்றுகிறோம் என்கிறார்.
இரண்டாவது அலையின்போது வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபர் கிராமத்துக்குத் திரும்பும் போது அறிகுறி இருந்தது. அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதும், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றினார். பிறகு அவருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனையில் வந்தது.
தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பணியும் தொடங்கியுள்ளது. இங்கு இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லை என்பதுதான் எங்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது என்கிறார்கள் ஊர் மக்கள்.
ஆனால் டிவியோ இணையதள வசதியோ இல்லாததால் கொரோனாவைப் பற்றிய தேவையற்ற செய்திகளும் வதந்திகளும், பீதியை கிளப்பும் செய்திகளும் வந்தடையவில்லை என்பதும் ஆறுதலான உண்மை.