குஜராத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
எனினும் தன்னலமற்ற மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல், சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பாலித்தீனில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கவச உடையை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கும்போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், உணவு சாப்பிட முடியாமல், தாகத்துக்கு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்து வருகின்றனர்.
குஜராத்தின் பதான் அருகே தார்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவர் சோகில் மக்வானா கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
தற்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பாதுகாப்பு கவச உடையை கழற்றியபிறகு வியர்வையில் நனைந்திருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து சில பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவரின் சார்பாக மக்களோடு பேசுகிறேன். எங்கள் குடும்பத்தை பிரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறோம். நோயாளிகளுக்கு மிக அருகில் நின்று சிகிச்சை அளிக்கிறோம்.
எங்களது வேதனை,துன்பங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்” என்று மருத்துவர் சோகில் மக்வானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.