
கொரோனா தொற்று காலத்தில் பொய்களையும், போலி மருத்துவ ஆலோசனைகளையும், வதந்திகளையும் நம்பாதீர் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு, ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து ஹீலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில், பல்வேறு தவறான தகவல்களை கூறியுள்ளதாகவும், அவற்றை நம்ப வேண்டாமெனவும், கொரோனாவுக்கான இந்திய அறிவியலாளர் குழு உறுப்பினர் லெனின் பாரதி எச்சரிக்கிறார்.
அவர் கூறியதாவது:கொரோனா வைரசால், நோயாளியின் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. மாஸ்க் அணிவதால் ஆக்ஸிஜன் குறைகிறது என்றும், மூக்கின் அருகே மின் விசிறி வைத்தால் சில மணி நேரத்தில், ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும் என்றும், ஹீலர் கூறியது தவறான தகவல்.மாஸ்க் அணிவதால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு பாதிக்காது.
வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடும் குறையாது. மாஸ்க் அணிய சொல்வது, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே என மருத்துவர்கள், வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால், லேசான சோர்வு போன்ற சிரமங்கள் இருப்பது இயல்பு.இதுபோன்ற தேவையற்ற, தவறான, அறிவியல் பூர்வமற்ற போலி தகவல்கள் பகிரப்பட்டு வருவதை, அரசு தடுக்க வேண்டும்.
இதனை பின்பற்றும் பாமர மக்களுக்கு, நோய் அபாய கட்டத்தை அடைந்து விடும்.மருத்துவ வல்லுனர்கள் மற்றும் வைரஸ் ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் தவிர, மற்றவர்கள் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது, இக்கொடுந்தொற்றை எதிர் கொள்வதை மேலும் சிக்கலாக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.