
இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் பல கோடி இந்தியர்களின் மரியாதை பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா மூலம் பல ஆயிரம் பேர் தினமும் இறந்து வரும் வேளையில் டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதாவது 30 வயதான ஒரு டாடா ஸ்டீல் ஊழியர் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அடுத்த 30 வருடம் அதாவது ஓய்வு பெறும் 60 வயது வரையில், ஊழியர் வாங்கிய கடைசி மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்க உள்ளதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளம் மட்டும் அல்லாமல் ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தில் நம்பிக்கை அளிக்க டாடா ஸ்டீல் சிறப்பான காரியத்தைச் செய்துள்ளது.

இதோடு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் Frontline ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளின் கல்வி அதுவும் பட்டம் பெறும் வரையில் கல்வி செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் எப்போதும் தனது முதலீட்டாளர்களை ஸ்டீல் போலக் காப்பாற்றும், தற்போது பாதிப்பு அடைந்த ஊழியரின் குடும்பத்திற்கு ஸ்டீல் போலப் பாதுகாப்பாகவும், அவர்களின் நலனுக்கான அனைத்து விதமான பணிகளையும் செய்யக் கடமைப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.