
வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தலைமை காவலரை, கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் பகுதியில் உள்ள சுகநதி ஆற்றில், நேற்று அதிகாலை மர்மநபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, டிராக்டர்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்ற குமாரை, அந்த கும்பல் அரிவாளால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, தலைமை காவலர் குமாரை, சக காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓட்டு கேக்க வரும் போதே சொன்னாங்க .. சொன்னதையும் செஞ்சு வெட்டறதையும் செஞ்சுட்டாங்க.. என்று அப்பகுதி மக்கள் மிகுந்த கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.