
மும்பையில் கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொன்றுவிட்டு உடலை 3 பகுதிகளாக வெட்டி சமையலறையில் எரித்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது 6 வயது குழந்தை காட்டிக் கொடுத்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர் ரயீஸ் ஷேக். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷாஹிதா ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பணி நிமித்தமாக இருவரும் மும்பையில் குடியேறினர்.
இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த மே 25 ஆம் தேதி ஷாஹிதா தாஹிசார் காவல் நிலையத்திற்கு கடந்த 21-ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அவர் வீட்டை விட்டு சென்றதிலிருந்தே அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த புகாரை வைத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரயீஸை தேடி வந்தனர். கடந்த 25 ஆம் தேதி ரயீஸின் சகோதரர் அனீஸ் மும்பை சென்றுள்ளார்.
அவர் நேராக தாஹிசார் காவல் நிலையத்திற்கு சென்று, தனது அண்ணி அவ்வப்போது அவரது வாக்குமூலத்தை மாற்றி வருகிறார் என தெரிவித்தார்.
இதனால் ஷாஹிதா மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இவர் எதையோ மறைக்கிறார் என்பதை போலீஸார் உணர்ந்தனர். நேற்று முன் தினம் ரயீஸின் வீட்டிற்கு போலீஸார் வந்தனர்.

அப்போது வீட்டை சோதனையிட்டனர். சமையலறையில் உள்ள டைல்ஸ்கள் சரிவர இல்லை, மேலும் சில டைல்ஸ்கள் காணாமல் போயிருந்தன.
பின்னர் தாஹிதாவிடம் போலீஸார் துருவி துருவி விசாரித்தவுடன் தனது கள்ளக்காதலன் அமித் மிஸ்ராவுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு அவரது உடலை எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து ஷாஹிதாவின் 6 வயது பெண் குழந்தையும் , அம்மா செய்ததை தான் கண்ணால் பார்த்ததாக தெரிவித்தது.
மேலும் இந்த உண்மையை வெளியே சொன்னால் அப்பாவை எரித்தது போல் உன்னையும் எரித்துவிடுவதாக அம்மா மிரட்டியதாகவும் அந்த 6 வயது குழந்தை தெரிவித்தது.

இதையடுத்து ஷாஹிதாவிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு பக்கத்து வீட்டுக்காரர் அமித் மிஸ்ராவுடன் கள்ளக்காதல் இருந்தது.
இது கணவர் ரயீஸுக்கு தெரியவந்து கள்ளக்காதலை உடனடியாக நிறுத்துமாறு கண்டித்தார். இதையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி கணவர் ரயீஸை தானும் அமித்தும் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அதை 6 வயது குழந்தை பார்த்துவிட்டதால் அவரது உடலை மூன்று பகுதிகளாக வெட்டி சமையலறையில் வைத்து எரித்ததாக ஷாஹிதா கூறியதை அடுத்து அவரையும் அமித்தையும் போலீஸார் கைது செய்தனர்.