மணிப்பூர் மாநிலம், இம்பாலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 18 மணி நேரம் நடத்திய சோதனையில், 43 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ரகசிய தகவல் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, அந்த காரில் தீவிரமாக, 18 மணி நேரம் சோதனை நடத்தியதில், 3 இடங்களில் 43 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதற்கு ஏதுவாக, அந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த காலங்களிலும், இந்த கார் மூலம் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்களின் மதிப்பு ரூ.21 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மணிப்பூரில் மியான்மர் எல்லயை ஒட்டிய பகுதிகளில் தங்க கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் கடத்தல் அதிகரித்து உள்ளது.
கடந்த 3 மாதத்தில் மட்டும், ரூ.33 கோடி மதிப்புள்ள 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சோதனையில் ஒரே நாளில் 55 கிலோ தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.