
~ ஜெயஸ்ரீ எம். சாரி
மஹாராஷ்டிராவில் மராட்டி மாதமான சிராவண மாதத்தின் அமாவாசையன்று ‘போளா’ எனப்படும் காளை மாடுகளுக்கான பெரும் விழா நடைபெறும். இந்த ஆண்டும் கொரானாவினால் விதிக்கப்பட்டுள்ள தடையினால் காளை மாடுகளின் அணிவரிசை நடத்தப்படவில்லை. ஆனாலும், விதர்ப பகுதியின் வர்தா மாவட்டத்தில் பிரஸித்தி பெற்ற ‘போளா’ நகரம் என்று அழைக்கப்படும் சிந்தி ( ரெயில்வே) நகரில் விவசாயிகள் தங்கள் காளை மாடுகளை அலங்கரித்து, பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்.
விவசாயிகளும், குழந்தைகளும் தங்கள் காளை மாடுகளை அவ்வூரில் இருக்கும் ஹனுமான் மந்திரில் பூஜைக்காக அழைத்து வந்தனர். அவ்வாறு வந்த 250 விவசாயிகளை மந்திரின் டிரஸ்டிகளின் கையால் மாலை, தொப்பி, அங்கவஸ்திரம் மற்றும் ‘ ஸ்ரீஃபல்’ எனப்படும் பூஜைக்குரிய தேங்காய் கொடுத்து கௌரவித்தனர்.
உள்ளூரில் பிரசித்தமான சுதாகர் கவகவே, மனோஜ் பேட்கர், பாபா பூதே, விட்டல் இடன்கர், கங்காதர் கலோடே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமாவாசைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விதர்ப பகுதிக்கே உரிய ‘தான்ஹா போளா’வும் அங்கு சிறுவர்கள் பங்கேற்புடன் அருமையாய் கொண்டாடப் பட்டது. சிறார்கள் தங்கள் மரத்திலான நந்திகளை (காளை மாடுகளை) அழகாய் அலங்கரித்து, பூஜை செய்து மகிழ்ந்தனர்.
ஷங்கர்ராவ் வான்கர் என்னும் 90- வயது முதியவரும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்தவுடன் தானும் தன் மரத்திலான நந்தி பொம்மையை அலங்கரித்து மக்களுக்கு தர்ஷணத்திற்காக கொண்டு வந்தார்.
இதனைக் கண்ட இளைஞர்கள், ‘தான்ஹா போளா’ சிந்தி (ரெயில்வே) மக்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது,’ என்றனர்.
“‘தான்ஹா போளா’ அன்று சிந்தி ( ரெயில்வேயில்) ஆயிரக் கணக்கான நந்தி பொம்மைகள் பார்வைக்காக பல்வேறு இடங்களில் இருந்தும் கொண்டு வரப்படும்.வர்தா மாநிலத்தில் இருந்தும், அண்டை மாநிலங்களான நாக்பூர், யவத்மாலிலிருந்தும் மக்கள் சிந்தி( ரெயில்வே) நகரத்தில் கூடுவர். இதனால் பல உள்ளூர் கலைஞர்கள், வியாபாரிகளும் பலனடைவர்.
இந்த கொரோனா காலத்தில் அவர்களின் வாழ்வாதரம் என்பது முடங்கித் தான் போய் உள்ளது. வரும் வருடமாவது நல்லதாக அமைய வேண்டும்,” என்கிறார் மூத்தப் பத்திரிகையாளர் நரேந்திர சுர்கார்.