ஐ.பி.எல் 2021 – வெள்ளிக்கிழமை – 08.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. எனவே இரசிகர்கள் எந்த மேட்சைப் பார்ப்பது எனத் தவித்தார்கள். டெல்லி-பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் சற்று முன்னதாக முடிவடைந்தது.
பெங்களூர் அணி டாஸ் வென்றது. டெல்லி அணியை பேட்டிங் செய்யச் சொன்னது. டெல்லி அணி மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள். ப்ருத்வி ஷா (48), ஷிகர் தவான் (43), பந்த் (10), ஷ்ரயாஸ் (18), ஹெட்மெயர் (29), எடுத்தனர். இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய பெங்களூர் அணி முதல் மூன்று ஓவர்களுக்குள் படிகளையும் விராட் கோலியையும் இழந்தது. ஆனால் ஸ்ரீகர் பரத்தும் (78), மேக்ஸ்வெல்லும் (51), டி வில்லியர்ஸும் (26) நன்றாக விளையாடி இருபது ஓவரில் 166 ரன் எடுத்து வென்றனர். ஆனால் இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.
டெல்லி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் பெங்களூர் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றன. இரண்டாவது ஆட்டம் மும்பைக்கும் சன்ரைசர்ஸ் அனிக்கும் இடையே நடந்தது. மும்பை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 171 ரன் வித்தியாசத்தில் எதிரணியை தோற்கடிக்கவேண்டும். அந்த வேகத்துடன் விளையாட வந்த மும்பை அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தார்கள்.
பேய் பிடித்தவர்கள் போல ஆடினார்கள். அவர்களுடைய அணியில் இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவ்வும் தலா 84 ரன், 82 ரன் எடுத்தனர். இருவரின் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல். இருபது ஓவர் முடிவில் அந்த அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 235 ரன் எடுத்தனர்.
ஆனால் சிக்கல் என்னவென்றால் அவர்கள் சன்ரைசர்ஸ் அணியை 65 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கவேண்டும். ஆனால் பிட்ச் ஒரு அருமையான பேட்டிங் பிட்ச். எனவே அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
பின்னர் ஆடவந்த சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் நன்றாக விளையாடினர். ஆனால் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்குப் போகாமல் தடுக்க முடிந்தது.
பிளேஆஃப் சுற்றில் டெல்லி அணி சென்னை அணியைச் சந்திக்கும். பெங்களூர் அணி கொல்கொத்தா அணியை சந்திக்கும்.