அம்பிகையின் மகிமை – 2
நமாமி யாமினீநாத லேகாலங்க்ருதகுந்தலாம் |
பவானீம் பவஸந்தாப நிர்வாபணஸுதாநதீம் ||
ச்லோகத்தில் கூறப்பட்ட அம்பிகையின் இரண்டாவது விசேஷணம் ‘பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம்’ என்பதாகும்.
இவ்வுலகில் நாம் அடையும் இன்பம் நீடிப்பதில்லை. மேலும் நாம் பெறும் இன்பம் கொடுமைகளுடன் சேர்ந்திருக்கிறது. துக்கமற்ற இன்பம் உலகில் இல்லை.
‘யெளவனம் ஜரயாக்ரஸ்தம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இளமை, இன்பம் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மூப்பு இதை முழுங்கி விடுகிறது.
இவ்வகையில் ஒவ்வொரு இன்பமும் தன் எதிரியான துக்கத்தினால் நாசமடைகிறது. ஆராய்ந்து பார்த்தால் நாம் எதை சுகம் என்று கருதுகிறோமோ மேலும் எதை துன்பம் என்று கருதுகிறோமோ அவையிரண்டும் துன்பமே என்றறிவோம்.
துன்பங்களை எப்பொழுதும் அனுபவிப்பதால் நமக்கு ஒரு ‘தாபம்’ அல்லது சூடு ஏற்படுகிறது. இதை நீக்குவதற்கு வழியிருக்கிறதா?
ஆம், பவானியே அவ்வழி. கோடைக் காலத்தில் வெப்பத்தினால் நமக்கு உடலில் தாபம் ஏற்படுகிறது. நாம் ஆற்றில் குளித்தால் துன்பம் நீங்கி இன்பம் பெறுகிறோம்.
அதேபோல் பிறவிப் பெருங்கடலில் தாபத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நமக்கு அம்பிகை தாபத்தைப் போக்கும் ஆற்றைப் போலிருக்கிறாள்.
எப்பெயர் பெற்ற ஆற்றைப் போலிருக்கிறாள்? ‘ஸுதா நதீம்’ அமுத ஆற்றைப் போலிருக்கிறாள்.
சாமான்ய ஆற்றின் நீரில் முங்கினாலே நமக்கு இன்பம் கிடைக்கிறது என்றிருக்கும்பொழுது அமுத ஆற்றில் முங்கினால் இன்பமும் அமைதியும் திருப்தியும் நாம் பெறுவோம் என்பதில் சந்தேகமுமே இல்லை.