போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சக நடிகை கங்கனா ரனாவத் மறைமுகமாக சீண்டியுள்ளார்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.
இதையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போலீசார், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நடிகை கங்கனா ரனாவத், ஷாருக்கானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் விடுத்துள்ள பதிவில், “நடிகர் ஜாக்கிசான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
மேலும், மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன். இது எனது தோல்வி. அவரை பாதுகாக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் எனக் கூறியிருந்தார்,” எனக் கூறி ஜாக்கிசானின் புகைப்படத்துடன் பதிவை பகிர்ந்திருந்தார். இது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ஷாருக்கான் இன்னும் அமைதி காத்து வரும் நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவு, பல்வேறு தரப்பினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.