போதை சாக்லேட்களை விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் – பெருமாநல்லூர் அருகேயுள்ள, புதிய திருப்பூர் பகுதியிலுள்ள பனியன் நிறுவனங்களில், தமிழக மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு செயல்படும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பீடா கடை ஒன்றில், போதை சாக்லெட் விற்பனை செய்வதாக, பெருமாநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டதில், போதை சாக்லேட் ஒன்று ரூ.20 முதல் ரூ.100 ரூபாய் வரை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.
மேலும், பீடா கடை நடத்தி வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திரிலோக சோன்கர் (வயது 27), கியாமுதீன் (வயது 30) இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மூலம் போதை சாக்லேட்டை வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ அளவிலான போதை சாக்லெட்டுகளை பெருமாநல்லூர் போலீசார் கைப்பற்றினர்.