
- செய்தி தொகுப்பு : ஜெயஸ்ரீ சாரி
கவிதை- மனங்களை இணைக்கும் விந்தை;
கவிதை- புரட்சியை விதைக்கும் விதை,
கவிதை- சொற்களின் அழகான வரிசை – என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாமின் சமீபத்திய மாதாந்திர கவிஞர்களின் சபை விளங்கியது.
பல மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாக காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் விளங்குகிறது.
ஐந்து அமர்வுகளாக சமீபத்தில் நடைபெற்ற மூன்று நாள் கவிஞர்கள் சபையில் கவிஞர்களின் கற்பனைத்திறன், புலமை என கருத்துக் களமாய் அமைந்திருந்தது.
காவிய காமுதி குழுவின் தலைவரான டாக்டர் குமுத் பாலா அவர்கள் குறிப்பிடும்போது “காவிய காமுதி குழுவானது நம் நாட்டு மற்றும் வெளிநாட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு அருமையான மேடையாய் உள்ளது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாக காவிய காமுதி விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் காவிய காமுதி குழு கவிஞர்கள் சபையை ஏற்பாடு செய்கின்றது.
குழந்தை கவிஞர்கள் முதல் உலகப் புகழ்பெற்ற பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட கவிஞர்கள் வரை தங்கள் கவிதைகளை வாசித்து ஆர்வமுடன் இதில் கலந்து கொள்கின்றனர். தங்கள் தாய்மொழியில் கவிதைகளை வாசிக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் புரிவதற்காக தங்கள் கவிதைகளின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறுவர். சிலரோ தங்கள் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையே வாசிப்பார்கள். சமீபத்திய கவிஞர்கள் சபையில் 150க்கும் மேலான கவிஞர்கள் பங்கேற்றதனால் ஐந்து பாகங்களாக மூன்று நாட்கள் ஜீம் காணொளி மூலம் நடைபெற்றது,” என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற காவிய காமுதி கவிஞர்கள் சபையானது எஸ்.பி. மகாலிங்கேஸ்வரர், செயலாளர், கேந்திரிய சாகித்ய அகாடமி, பெங்களூர், அவர்களின் உரையுடன் தொடங்கப்பட்டது. அவர் தன்னுடைய உரையில் இந்தியையும் பிற மொழிகளுடன் சேர்த்து ஜனரஞ்சமாக செய்தல் நலம் என்றும், நவீன யுகத்தில் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். காவிய காமுதி குழுமத்தின் தலைமை ஆலோசகர் ‘டக்லைன் கிங்’ Alapati கலந்துக் கொண்டு சிறப்பித்தார். டாக்டர். மனோஜ் கிஷோர் நாயக், இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ், ஒடிசா, இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க பெரிதும் உதவினார்.

ஐந்து பாகங்களாக நடத்தப்பட்ட கவிஞர்கள் கூட்டத்தில் அனுஜ் மோகன் பிரதான் ஒடிசா, ஷீனா கைமல்- கேரளா, லோபாமுத்ரா மிஷ்ரா- ஒடிசா, புரொஃபசர் ஷீனா கான் சரோஷ் – தில்லி, பாஸ்கர் ஜா- மும்பை, நீலம் சக்ஸேனா- புனே, டாக்டர் ரூபாலி சிர்கர் கௌர்- மீரட், சீமா ஜைன்- ஜலந்தர், சபிதா சாஹு- ஒடிசா, அக்னிவேஷ் மஹாபாத்ரா – ஒடிசா, மஹீஆ சென்- ஹைதராபாத், கர்னல் ப்ரதீப் குமார் – திருவனந்தபுரம், புரொஃபசர் ஏஞ்சலோ ரிஜ்ஜி – ட்யூனிஷியா, பத்மாவதி – யு எஸ் ஏ மற்றும் டாக்டர் சோனியா பத்ரா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இந்த சபையில் ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ், மலாய், மலையாளம், தெலுங்கு, ஃபிலிபினோ, ராஜஸ்தானி, அஸ்ஸாமி, ஒடியா, இத்தாலியன், சமஸ்கிருதம், நேபாளி, போடோ மொழிகளில் கவிதைகள் வாசிக்கப்பட்டது.
இந்த கவிஞர்கள் சபையில் பங்கு பெறுவோருக்கு ஒரு கற்கும் மேடையாக காவிய காமுதி குழுமம் இருக்கின்றது என்பது மிகையாகாது.