
புலிகள் கணக்கெடுப்பு பணியின்போது அடர்ந்த காட்டுக்குள் சென்ற ஒரு புலியை பின்தொடர்ந்து கண்காணித்த பெண் வனக்காவலர் மீது பாய்ந்து கடித்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு கோலாரா வனச்சரகத்தில் சுவாதி துமனே என்பவர் வனக்காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
சுவாதி துமனே நேற்று காலையில் ஏழு மணி அளவில் மூன்று உதவியாளர்களுடன் கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்.
கோலாரா கேட்டில் இருந்து 4 கிலோமீட்டர் வரை காட்டின் மையப்பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது அங்குள்ள ஒரு சாலையில் பெண் புலி ஒன்று நிற்பதை குழுவினர் பார்த்துள்ளனர்.
அவர்கள் நின்ற இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் அந்த புலி நின்று கொண்டிருந்திருக்கிறது . அந்த புலி எங்கே போகிறது என்பதை கண்காணிக்க அரை மணி நேரம் வரைக்கும் அங்கேயே காத்திருந்து கண்காணித்து இருக்கிறார்கள். பின்னர் அந்த புலி அடர்ந்த காட்டுக்குள் சென்று இருக்கிறது .
அடர்ந்த காட்டுக்குள் இந்த புலி எங்கே செல்கிறது என்பதை கண்காணிக்க பின்தொடர்ந்து இருக்கிறார்கள். இதை கவனித்த புலி வனக்காவலர் சுவாதி துமனே மீது பாய்ந்து தாக்கி இருக்கிறது. உதவியாளர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் போயிருக்கிறது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றபின்னர் உதவியாளர்களின் முயற்சியில் சுவாதி துமனேயை சடலமாகத் தான் மீட்க முடிந்திருக்கிறது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புலி தாக்கி உயிரிழந்த சுவாதி துமனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் நடந்து சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கோலாரா புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.



