
- K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, மே இரண்டாம் நாள் கொல்கொத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 47ஆவது போட்டி நடந்தது.
ராஜஸ்தான் அணி (152/5, சஞ்சு சாம்சன் 54, ஹெட்மையர் 27, ஜாஸ் பட்லர் 22, சவுதி 2 விக்கட், உமேஷ், அங்குல், ஷிவம் மாவி தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா அணியிடம் (158/3, ஷ்ரேயாஸ் ஐயர் 34, நித்தீஷ் ராணா 48, ரிங்கு சிங் 42, போல்ட், கிருஷ்ணா, சென் தலா ஒரு விக்கட்) தோற்றுப்போனது.
டாஸ் வென்ற கொல்கொத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லரும் சஞ்சு சாம்சனும் இணைந்து 48 ரன் கள் சேர்த்திருந்தபோது பட்லர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்கள் ரன்ரேட்டை உயர்த்த முயன்றபோது ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 153 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கொத்தா அணிக்கு இன்று மற்றுமொரு புதிய தொடக்க ஆட்டக்கார ஜோடி ஆட வந்தார்கள்.
அவர்களில் ஆரோன் ஃபின்ச் நாலாவது ஓவரிலும், பா இந்தரஜித் ஆறாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷ்ரேயாச் ஐயர், நிதீஷ் ராணா, ரிங்கு சிங் அகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.