spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா‘கர்த்தவ்ய பத்’ - கடமைப் பாதையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?!

‘கர்த்தவ்ய பத்’ – கடமைப் பாதையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?!

- Advertisement -

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்திலே, தேசத்திற்கு இன்று, ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது, புதிய சக்தி பிறந்திருக்கிறது.   நாம் இன்று, கடந்து போன நேற்றை விடுத்து, வரவிருக்கின்ற நாளைய ஓவியத்தினை, புதிய வண்ணங்களால் நிரப்புகிறோம்.  அனைத்துத் திசைகளிலும் இன்று, ஒரு புதிய ஒளி தென்படுகிறது.   இது புதிய பாரதத்தினுடைய, புதிய நம்பிக்கையின் ஒளியாகும்.  அடிமைத்தனத்தின் சின்னமான, கிங்ஸ்வே, அதாவது, ராஜ்பத், அது இன்றிலிருந்து, கடந்தகாலமாகி விட்டது.  காலகாலத்திற்கும் நொறுங்கி விட்டது.  இன்று, கர்த்தவ்ய பத் என்ற உருவிலே, புதிய வரலாறு ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், சுதந்திரத்தின் இந்த அமுதக்காலத்திலே, அடிமைத்தனத்தின் மேலும் ஒரு சின்னத்திலிருந்து விடுதலையடைந்தமைக்கு, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நண்பர்களே, இன்று இண்டியா கேட்டிற்கு அருகிலே, நம்முடைய ராஷ்ட்ரநாயகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடைய விசாலமான உருவச்சிலையும் கூட, சிறப்பாக நிறுவப்பட்டிருக்கிறது.   அடிமைத்தனக் காலத்திலே, இங்கே பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்தின் பிரதிநிதியுடைய, உருவச்சிலை இருந்து வந்தது.   இன்று, தேசமானது, அதே இடத்தினிலே, நேதாஜியினுடைய உருவச்சிலையினை நிறுவி, நவீனமான, மேலும் சக்திபடைத்த பாரதத்தின், பிராணபிரதிஷ்டையையும் செய்து விட்டது.   உண்மையிலேயே, இந்தச் சந்தர்ப்பம், சரித்திர முக்கியத்துவமானது.  இந்தச் சந்தர்ப்பம், இதுவரை காணாதது.   நம்மனைவரின் பேறென்று சொன்னால், நாமனைவரும், இன்றைய நாளைக் காண்கிறோம், இதன் சாட்சிகளாகவும் இருக்கிறோம். 

நண்பர்களே, சுபாஷ் சந்திர போஸ் எப்படிப்பட்ட மாமனிதரென்றால், அவர் பாதை, மற்றும் ஆதாரங்கள் இல்லா நிலைமையைக், கடந்தவராக இருந்தார்.   அவருடைய ஏற்புத்தன்மை எப்படிப்பட்டதாக இருந்தது என்றால், உலகம் முழுமையும், அவரைத் தலைவராகக் கருதியது.  அவரிடத்தில் தைரியம் இருந்தது, சுயமரியாதை இருந்தது, அவரிடத்திலே கருத்துக்கள் இருந்தன தொலைநோக்கு இருந்தது, அவரிடத்திலே தலைமைப் பண்புகள் இருந்தன, கொள்கைத் திட்டங்கள் இருந்தன.  நேதாஜி சுபாஷ் கூறுவதுண்டு, அதாவது பாரதம், இந்த நம்முடைய தேசம், இது, தன்னுடைய கௌரவம் மிக்க வரலாற்றை மறக்காது.   பாரதத்தினுடைய கௌரவம்மிக்க வரலாறு, ஒவ்வொரு பாரதவாசியின் உதிரத்திலும் இருக்கிறது.   அவர்களுடைய பாரம்பரியத்திலே இருக்கிறது.  நேதாஜி சுபாஷ், பாரதத்தின் மரபின் மீது பெருமிதம் கொண்டிருந்தார்.  மேலும் பாரதத்தை, எத்தனை விரைவாக முடியுமோ, அத்தனை விரைவாக நவீனமயமாக்கவும் விரும்பினார்.   ஒருவேளை விடுதலை அடைந்த பிறகு, நம்முடைய பாரதம், சுபாஷ் பாபுவுடைய பாதையிலே சென்றிருந்தால், இன்று தேசம், மிகப் பெரிய அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கும்!!  ஆனால், துர்பாக்கியவசமாக, சுதந்திரம் அடைந்த பிறகு, நம்முடைய இந்த மஹாநாயகன், மறக்கடிக்கப்பட்டு விட்டான்.   அவருடைய கருத்துக்களை, அவரிடமிருந்து பெறப்பட்ட அடையாளங்கள் கூட,  புறந்தள்ளி ஒதுக்கப்பட்டன.  சுபாஷ் பாபுவினுடைய, 125ஆவது பிறந்த நாள் தொடக்க விழாவின் போது, கோல்காத்தாவிலே எனக்கு, அவருடைய இல்லம் செல்லும் பேறு கிடைத்தது.   நேதாஜியோடு தொடர்புடைய இடத்தினிலே, அவரது எல்லையற்ற சக்தியை, என்னால் அங்கே உணர முடிந்தது.   இன்று தேசத்தின் முயற்சி என்னவென்றால், நேதாஜியின் அந்தச் சக்தி, தேசத்தின் பாதையைத் துலக்கட்டும் என்பதே.   கர்த்தவ்ய பத்திலே, நேதாஜியின் உருவச்சிலை, இதன் ஊடகமாகத் திகழும்.   தேசத்தின் கொள்கைகள், மற்றும் தீர்மானங்களில், சுபாஷ் பாபுவுடைய முத்திரை இருக்க வேண்டும், இந்த உருவச்சிலை, இதற்கான ஒரு, உத்வேக ஊற்றுக்கண்ணாக இருக்கும்.   

சகோதர சகோதரிகளே, கடந்த 8 ஆண்டுகளிலே, நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, இப்படி எத்தனையோ முடிவுகளை எடுத்திருக்கிறோம்.   இவற்றின் மீது, நேதாஜியின் கொள்கைகள், மேலும் கனவுகளின் முத்திரை உள்ளது.   நேதாஜி சுபாஷ், அகண்ட பாரதத்தின் முதல் பிரதமராக இருந்தார்.   இவர் தான், 1947க்கும் முன்னரே கூட, அண்டமானுக்கு, விடுதலை அளித்து, மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டார்.   அந்த நேரத்திலே அவர் கண்ட கனவு, செங்கோட்டையிலிருந்து மூவண்ணம் பறந்தால் அனுபவம் எப்படி இருக்கும் என்பது தான்.   இந்த அனுபவத்தை என் வாழ்வினிலே, நேரடியாக நான் உணர்ந்திருக்கிறேன்.   அதாவது நான், ஆஸாத் ஹிந்த் அரசாங்கத்துடைய, 75 ஆண்டுகள் நிறைவான போது, செங்கோட்டையில் மூவண்ணத்தைப் பறக்க விடும் பேறு பெற்ற போது உணர்ந்தேன்.   எங்களுடைய அரசாங்கத்தின் முயற்சியால் தான், செங்கோட்டையிலிருந்து, நேதாஜி, மேலும் ஆஸாத் ஹிந்த் ஃபௌஸோடு தொடர்புடைய, அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.  

நண்பர்களே, என்னால் அந்த நாளை மறக்க முடியாது, அதாவது 2019இலே, குடியரசுத் திருநாள் அணிவகுப்பின் போது, ஆஸாத் ஹிந்த் ஃபௌஸின் வீரர்களுமே கூட, பங்கெடுத்துக் கொண்டார்கள்.   இந்த கௌரவத்திற்காக அவர்கள், பல தசாப்தங்களாகக் காத்திருந்தார்கள்.   அண்டமானிலே எந்த இடத்திலே, நேதாஜி மூவண்ணக் கொடியை ஏற்றினாரோ, அங்கேயும் நான் சென்றிருந்தேன், போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.   மூவண்ணக் கொடியை ஏற்றும் பேறு கிடைத்தது.  அந்தக் கணம், நாட்டுமக்கள் அனைவருக்கும், பெருமிதமளிக்கும் கணமாகும். 

அண்டமானின் அந்தத் தீவு, எதற்கு நேதாஜி அவர்கள், முதன்முதலாக விடுதலை அளித்தாரோ, அதுவும் சில காலம் முன்பு வரை, அதுவுமே கூட அடிமைத்தனத்தின் பாரத்தைச் சுமக்கும் கட்டாயத்தில் இருந்தது.   சுதந்திர பாரதத் திருநாட்டிலே, அந்தத் தீவுகளின் பெயர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பெயரிலேயே இருந்தது.   நாங்கள் அடிமைத்தனத்தின் அந்த அடையாளங்களை அழித்து, இந்தத் தீவுகளை, நேதாஜி சுபாஷோடு இணைத்து, பாரதநாட்டுப் பெயரிட்டோம், பாரதநாட்டு அடையாளமளித்தோம்.   

நண்பர்களே, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் அடைய பிறகு, நமக்காக வேண்டி, 5 உறுதிமொழிகள் என்ற இலக்கை அளித்தேன்.   இந்த 5 உறுதிகளிலே, வளர்ச்சிக்கான பெரிய இலக்குகள் என்ற உறுதிப்பாடு இருக்கிறது, கடமைகளின் கருத்தூக்கம் இருக்கிறது.   இதிலே அடிமைத்தன மனோபாவத்தைத் துறக்க அறைகூவல் இருக்கிறது.   நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ள அழைப்பு இருக்கிறது.   இன்று, பாரதத்தின் இலட்சியங்கள் நம்முடையவையாகும்.   எல்லைகள் நம்முடையவையாகும்.  இன்று பாரதத்தின் உறுதிப்பாடுகள் நம்முடையவையாகும்.   இலட்சியங்கள் நம்முடையவையாகும்.   இன்று, நமது பாதை நம்முடையதாகும்.  நமது அடையாளங்கள் நம்முடையவையாகும். 

மேலும் நண்பர்களே, இன்று ராஜ்பத்தினுடைய இருப்புக்கு முடிவு கட்டப்பட்டு, கர்த்தவ்ய பத் உருவாக்கப்பட்டிருக்கிறதென்றால், அதே போல, ஐந்தாம் ஜார்ஜினுடைய உருவச்சிலை அகற்றப்பட்டு, நேதாஜியின் உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கிறதென்றால், அப்போது இது, அடிமைத்தன மனோபாவத்தை விட்டொழித்தமைக்கான, முதல் எடுத்துக்காட்டு கிடையாது.   இது ஒன்றும் தொடக்கமும் அல்ல, அதே போல முடிவுமல்ல.   இந்த மன உள்மனத்தின் விடுதலை என்ற இலக்கு, எட்டப்படும் வரையில், நிரந்தரமாகத் தொடரக்கூடிய சங்கல்ப யாத்திரையாக இருக்கும்.   தேசத்தின் பிரதம மந்திரி, எங்கே வசித்து வந்தாரோ, அந்த இடத்தினுடைய பெயரான, ரேஸ் கோர்ஸ் ரோட் மாற்றப்பட்டு, லோக் கல்யாண் மார்க் ஆகி விட்டது.   நம்முடைய குடியரசுத் திருவிழாவின் போது இப்போது, பாரதநாட்டு இசைக்கருவிகளின் இசையின் எதிரொலித்து வருகிறது.   Beating Retreat என்ற இராணுவ வாத்திய நிகழ்ச்சியிலே கூட, இப்போது தேசபக்தி நிரம்பிய, கீதங்களை செவிமடுத்து, நாட்டவர் ஒவ்வொருவரும் ஆனந்தமாக உணர்கிறார்கள்.   தற்பொழுது தான், பாரதத்தின் கடற்படையும் கூட, அடிமைத்தனத்தின் அடையாளத்தை அகற்றி வீசி, சத்ரபதி சிவாஜி மஹராஜின் அடையாளத்தைத் தழுவியிருக்கிறார்கள்.   தேசிய போர்நினைவுச் சின்னத்தை அமைத்து தேசமானது, நாட்டுமக்கள் அனைவரின் பலகாலத்திய விருப்பத்தை நிறைவேற்றியது.  

நண்பர்களே, இந்த மாற்றம், அடையாளங்கள் சின்னங்களோடு மட்டுமே நின்று போகவில்லை.   இந்த மாற்றம், தேசத்தின் கொள்கைகளிலும் கூட, அங்கமாகி விட்டது.  இன்று தேசம், ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து தொடர்ந்துவரும், நூற்றுக்கணக்கான சட்டங்களை மாற்றி விட்டது.   பாரதநாட்டு பட்ஜெட், இது இத்தனை தசாப்தங்களாக, பிரிட்டிஷ் அவைகள் கூடும் காலத்தை ஒத்திருந்தது, அதன் தேதியும் காலமும் மாறி விட்டன.  தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக, விதேசி மொழி என்ற கட்டாயத்திலிருந்தும் கூட, தேசத்தின் இளைஞர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டிருக்கிறது.   அதாவது, இன்று தேசத்தின் எண்ணம், மேலும் தேசத்தின் நடவடிக்கை, இரண்டுமே, அடிமைத்தன மனோபாவத்திலிருந்து விடுதலை அடைந்து கொண்டிருக்கின்றன.   இந்த விடுதலை, நம்மை வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி, அழைத்துச் செல்லும். 

நண்பர்களே, மஹாகவி, பாரதியார் அவர்கள், பாரதத்தின் மகத்துவம் குறித்து, தமிழ் மொழியிலே, மிகவும் அழகான கவிதையினை எழுதியிருக்கிறார்.   இந்தக் கவிதையின் தலைப்பு – பாருக்குள்ளே, நல்ல, நாடெங்கெள், பாரத நாடு.   மகாகவி பாரதியாருடைய இந்தக் கவிதை, நாட்டுமக்கள் அனைவருள்ளும் பெருமிதத்தை நிரம்பச் செய்யும்.   அவருடைய கவிதையின் பொருள் என்னவென்றால், நம்முடைய தேசமான பாரதம், உலகம் முழுவதிலும் மகத்துவம் வாய்ந்தது.   ஞானத்திலே, பரமோனத்திலே, உயர் மானத்திலே, அன்ன தானத்திலே, கானத்திலே, அமுதாக நிறைந்த கவிதையிலே, நமது தேசம், பாரதம், ஒட்டுமொத்த உலகிலுமே, மிகவும் மகத்துவமானது.   தீரத்திலே, படைவீரத்திலே, நெஞ்சில் ஈரத்திலே, பிறர்க்கு உபகாரத்திலே, வாழ்க்கையின் சாரத்திலே, அறிவியல் ஆய்வினிலே, நம்முடைய தேசம் பாரதம், ஒட்டுமொத்த உலகிலுமே மிகவும் மகத்துவமானது.   தமிழ்க்கவி பாரதியாரின் இந்த, அவருடைய கவிதையின், ஒவ்வொரு சொல்லின் உணர்வினையும் உணர்ந்து பாருங்கள்.  

நண்பர்களே, அடிமைத்தனத்தின் அந்தக்காலகட்டத்திலே, இது ஒட்டுமொத்த உலகிற்கும், பாரதத்தின் கர்ஜனையாக இருந்தது.   இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறைகூவலாக இருந்தது.   எந்த பாரதம் பற்றிய வர்ணனையை, பாரதியார் தனது கவிதையிலே வடித்திருக்கிறாரோ, நாம் அந்த, மிகவுயர்ந்த பாரதத்தை நிர்மாணத்தை, கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும்.   அதற்கான நல்ல பாதை, இந்தக் கர்த்தவ்ய பத்திலிருந்து தான் செல்கிறது.  

நண்பர்களே, கர்த்தவ்ய பத்,  வெறும் கற்கள் மணலால் போடப்பட்ட பாதை மட்டுமல்ல, இது பாரதத்தின் ஜனநாயகக் கடந்த காலம், மற்றும் அனைத்துக் கால ஆதர்சங்களின், உயிர்ப்புடைய மார்க்கமாகும்.   இங்கே தேசத்தவர்கள் வரும் போது, அவர்கள் நேதாஜியின் உருவச்சிலை, தேசிய போர் நினைவுச் சின்னம், இவையனைத்தும் அவர்களுக்கு, எத்தனை பெரிய உத்வேகமளிக்கும், அவர்களிடம், கடமை பற்றிய விழிப்பினை ஏற்படுத்தும்.   இதே இடத்தில் தான், தேசத்தின் அரசாங்கமும் பணியாற்றி வருகின்றது.   நீங்களே கற்பனை செய்து பாருங்கள், தேசமானது யாரிடத்திலே நிர்வாகம் செய்யும் பொறுப்பினை அளித்திருக்கிறதோ, அவர்களுக்கு ராஜ்பத், மக்களின் சேவகனாக இருக்கும் மனோபாவத்தை எப்படி ஏற்படுத்தும்?   பாதையே ராஜபாதையானால், அப்போது யாத்திரை, மக்களுக்கானதாக எப்படி இருக்கும்?   ராஜ்பத், பிரிட்டிஷ் ராஜுக்கானது.   அவர்களுக்கு பாரத நாட்டவர்கள் அடிமைகள்.   ராஜ்பத்தின் உணர்வும் கூட, அடிமைத்தனத்தின் அடையாளம்.   அது ஏற்படுத்தப்பட்டதும் கூட, அடிமைத்தனத்தின் அடையாளமே.   அதன் இன்றைய, கட்டிடவியலும் மாற்றப்பட்டிருக்கிறது, மேலும் இதன் ஆன்மாவும் மாறியிருக்கிறது.   தவிர தேசத்தின் மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், இந்தப் பாதை வழியே பயணிக்கும் போது, அவர்களுக்குக் கர்த்தவ்ய பத்திலிருந்து தேசத்திடம், தங்கள் கடமைகளின் விழிப்பு உண்டாகும்.   இதற்காக, ஒரு புதிய சக்தி கிடைக்கும்.  கருத்தூக்கம் கிடைக்கும்.   தேசிய போர் நினைவுச் சின்னம் தொடங்கி, கர்த்தவ்ய பத்திலே பயணிக்கும் போது, குடியரசு மாளிகை தொடர்பான இந்தப் பகுதி முழுவதும், அவர்களுக்கு நேஷன் ஃபர்ஸ்ட், தேசத்திற்கே முதன்மை, இந்த உணர்வின் பெருக்கு, ஒவ்வொரு கணமும் பெருக்கெடுத்து ஓடும்.  

நண்பர்களே, இன்றைய இந்தச் சந்தர்ப்பத்திலே, நான் என்னுடைய தொழிலாளி நண்பர்களுக்கு, விசேஷமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  இவர்கள் இந்தக், கர்த்தவ்ய பத்தை வெறுமனே உருவாக்கவில்லை, மாறாகத் தங்கள் உழைப்பின் வெளிப்பாட்டாலே, தேசத்திற்குக் கடமைப்பாதையைக் காட்டியும் இருக்கிறார்கள்.   எனக்கு, அந்த தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது.   அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, என் மனதில் ஏற்பட்ட உணர்வு, இந்த தேசத்தின் ஏழைகள், தொழிலாளிகள், மேலும் பாரதத்தின் சாமானியர்களின் மனதிலே, பாரதம் பற்றிய எத்தனை பெரிய கனவு இருக்கிறது தெரியுமா.   தங்களுடைய வியர்வையைச் சிந்தும் வேளையிலே, அவர்கள் அந்தக் கனவுக்கு உயிர்ப்பளிக்கின்றார்கள்.  நான் இன்றைக்கு, இந்தச் சந்தர்ப்பத்திலே, அந்த ஏழைத் தொழிலாளிகள் அனைவருக்கும், தேசத்தின் தரப்பிலிருந்து, நன்றிகளைத் தெரிவிக்கிறேன், அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.   நமது தேசத்தின் இதுவரை காணா வளர்ச்சிக்கு, நமது தொழிலாள சகோதரர்கள், வேகம் அளிக்கிறார்கள்.   நான் இன்று இந்த தொழிலாள சகோதர சகோதரிகளைச் சந்தித்த போது, அப்போது அவர்களிடம் கூறினேன், இந்த முறை 26 ஜனவரியின் போது, யாரெல்லாம் இங்கே பணியாற்றினார்களோ தொழிலாள சகோதரர்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு, எனது சிறப்பு விருந்தினர்களாக 26 ஜனவரியின் போது இருப்பார்கள்.    எனக்கு நிறைவாக இருக்கிறது, நமது புதிய பாரதத்திலே, இன்று உழைப்பு, மற்றும் உழைப்பாளர்களுக்கு மரியாதை, ஒரு கலாச்சாரமாக ஆகி வருகிறது.   ஒரு பாரம்பரியம் மீள் உயிர்ப்பு அடைகிறது.  

மேலும் நண்பர்களே, கொள்கைத் திட்டங்களில் புரிந்துணர்வு ஏற்படும் போது, அப்போது தீர்மானங்களும் கூட, அதே அளவுக்கு புரிந்துணர்வு கூடியதாகவே ஏற்ப்டும்.   ஆகையினாலே தான், தேசம் தனது தொழிலாளர்கள் சக்தி குறித்துப் பெருமிதம் கொள்கிறது.   ச்ரமயேவ ஜயதே.   இன்று தேசத்தின்மந்திரமாகி வருகிறது.   ஆகையினாலே, பனாரசிலே, காசியிலே, விஸ்வநாதர் கோயிலை மக்களுக்கு அர்ப்பணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்த போது, தொழிலாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலே பூமாரி பொழியப்பட்டது.   பிரயாக் ராஜிலே பவித்திரமான கும்பமேளா நடக்கும் போது, அப்போது உழைப்பாளிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.   இப்போது சில நாட்கள் முன்பு தான், தேசத்தின் சுதேசி விமானம் தாங்கிக் கப்பலான, ஐஎன் எஸ் விக்ராந்த் கிடைத்த போது, அப்போதும் கூட,  ஐஎன் எஸ் விக்ராந்தின் உருவாக்கத்திலே இரவுபகலாக உழைத்த, தொழிலாளர் சகோதரர்கள், மேலும் அவர்களின் குடும்பத்தாரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.   அவர்களை நான் சந்தித்து என் நன்றிகளைத் தெரிவித்தேன்.   உழைப்புக்கு உயர்வளிக்கும் இந்தப் பாரம்பரியம், இப்போது தேசத்தின் நற்பண்புகளின் பிரிக்கமுடியா அங்கமாகி வருகிறது.   உங்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் படலாம், தேசத்தின் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பிறகு, அதிலே, உழைக்கும் வர்க்கத்தின் தொழிலாளர்களுக்கும் கூட, ஒரு விசேஷமான மாடத்திலே இடம் அளிக்கப்படும்.   இந்த மாடம், வரவிருக்கும் தலைமுறையினருக்கும் ஒன்றை நினைவுறுத்தும், அதாவது ஜனநாயகத்தின் அடித்தளத்தில் மேலும் ஒரு அரசியல் சட்டம் இருக்கிறது, என்று சொன்னால் மறுபுறம், தொழிலாளர்களின் பங்களிப்பும் இருக்கிறது.   இந்த உத்வேகம் தான், நாட்டுமக்கள் அனைவருக்கும், ஒரு கர்த்தவ்ய பத்தையும் அளிக்கும்.   இந்த உத்வேகம் தான், உழைப்பிலிருந்து வெற்றிக்கான பாதையைத் துலக்கிக் காட்டும். 

நண்பர்களே, நம்முடைய நடவடிக்கைகளிலே, நம்முடைய ஆதாரங்களிலே, நம்முடைய பொருட்களிலே, நம்முடைய கட்டமைப்பிலே, நவீனமயம் இந்த அமிர்தகாலத்தில் ஒரு முக்கியமான இலக்காக விளங்குகிறது.     மேலும் நண்பர்களே, நாம் உள்கட்டமைப்பு பற்றிப் பேசும் போது, பெரும்பாலான பேர்களின் மனங்களிலே, முதல் காட்சி, சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் பற்றியதாக இருக்கிறது.   ஆனால் நவீனமயமாகி வரும் பாரதத்திலே, கட்டமைப்பின் விரிவாக்கம், அதையும் விடப் பெரியது அதற்குப் பல கோணங்கள் உண்டு.   இன்று பாரதம், சமூகக் கட்டமைப்பு, போக்குவரத்துக் கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்புக்குப் பிறகு, கலாச்சாரக் கட்டமைப்பின் மீதும் அதே வேகத்தில் பணியாற்றி வருகிறது.   நான் உங்களுக்கு சமூகக் கட்டமைப்பிற்கான எடுத்துக்காட்டை அளிக்கிறேன்.  இன்று தேசத்திலே, எய்ம்ஸ்களின் எண்ணிக்கை முன்பிருந்ததை விட மும்மடங்கு அதிகரித்து விட்டது.   மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையிலும் கூட 50 சதவீகித அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.   இது எதைக் காட்டுகிறது?  அதாவது பாரதம் தனது குடிமக்களின் உடல்நலத்தை மேலும் சிறப்பாக்க, அவர்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கொண்டு சேர்க்க, எப்படிப் பணியாற்றுகிறது என்பதை.   இன்று தேசத்திலே, புதிய ஐஐடிக்கள், டிரிப்பிள் ஐடிக்கள், விஞ்ஞான நிறுவனங்களின் நவீன வலைப்பின்னல், தொடர்ந்து, விரிவக்கப்பட்டு வருகிறது உருவாக்கப்பட்டு வருகிறது.   கடந்த 3 ஆண்டுகளிலே, 6 ½ கோடிகளுக்கும் மேற்பட்ட, ஊரகப்பகுதி வீடுகளுக்குக் குழாய்வழி குடிநீர், உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இன்றூ தெசத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 75, அமுதநீர்நிலைகள் ஏற்படுத்தப்படும் பேரியக்கமும் நடைபெற்று வருகிறது.   பாரதத்தின் இந்தச் சமூகக்கட்டமைப்பு, சமூகநீதியை, மேலும் செறிவானதாக்குகிறது.  

நண்பர்களே, போக்குவரத்துக் கட்டமைப்பின் மீது இன்று பாரதம் எத்தனை பணியாற்றி வருகிறதோ, அது முன்னெப்போதும் நடந்ததே கிடையாது.   இன்று தேசமெங்கும் அனைத்து இடங்களிலும், ஊரகப்பகுதிச் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.   அதே போல சாதனை எண்ணிக்கையிலே, நவீன விரைவுவழிச் சாலைகள் உருவாக்கம் பெற்று வருகின்றன.   இன்று தேசத்திலே ரயில்வேக்களின் விரைவாக மின்மயமாக்கம் நடந்து வருகிறது.   அதே அளவு விரைவிலே, பல்வேறு நகரங்களில் மெட்ரோக்களின் விரிவாக்கமும் நடந்தேறி வருகின்றது.   இன்று தேசத்திலே பல புதிய விமான நிலையங்கள் உருவாகி வருகின்றன, நீர்வழிகளின் எண்ணிக்கையிலும் இதுவரை காணாத அதிகரிப்பு நடந்து வருகிறது.   டிஜிட்டல் கட்டமைப்பு எனும் போது பாரதம், இன்று உலகின் முன்னணி நாடுகளில் முதன்மையாக விளங்குகிறது.   ஒண்ணரை இலட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துக்கள் வரை, கண்ணாடி இழையைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், டிஜிட்டல் பேமண்டுகளின் புதிய சாதனையாகட்டும், பாரதத்தின் டிஜிட்டல் முன்னேற்றம் பற்றியே உலகெங்கிலும் பேசப்படுகிறது.   

சகோதர சகோதரிகளே, கட்டமைப்பின் இந்தப் பணிகளுக்கு இடையே, பாரதத்திலே, கலாச்சாரக் கட்டமைப்பு தொடர்பாகச் செய்யப்பட்டிருக்கும் பணிகள், அது அந்த அளவுக்குக் பேசுபொருளாக ஆகவில்லை.   பிரசாத் திட்டத்தின் வாயிலாக, தேசத்தின் பல புண்ணியத் தலங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகின்றன.  காசி கேதார்நாத் சோம்நாத் தொடங்கி, கர்த்தார்பூர் சாஹிப் இடைவழி வரைக்குமாக புரியப்பட்டிருக்கும் பணிகள்,  இது வரலாறு காணாதவை.  

மேலும் நண்பர்களே, நாம் கலாச்சாரக் கட்டமைப்புப் பற்றிப் பேசும் வேளையிலே, இதன் பொருள், நம்பிக்கையோடு தொடர்புடைய கலாச்சாரக் கட்டமைப்பு மட்டுமல்ல.   கட்டமைப்பு நம்முடைய வரலாற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம்.   இது நமது தேசநாயகர்கள் நாயகிகளோடு தொடர்புடையதாக இருக்கலாம்.   இது நமது மரபோடு தொடர்புடையதாக இருக்கலாம்.   இவையும் அதே அளவு அர்ப்பணிப்போடு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.   சர்தார் படேலின் ஒற்றுமைச்சிலையாகட்டும், அல்லது நமது, பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம்.   பிஎம் மியூசியமாகட்டும், அல்லது பாபாசாகேப் அம்பேட்கரின் நினைவகமாகட்டும், தேசிய போர்நினைவுச் சின்னமாகட்டும், அல்லது, தேசிய காவலர்கள் நினைவுச் சின்னமாகட்டும்.   இவை கலாச்சாரக் கட்டமைப்பிற்கான எடுத்துக்காட்டுகள்.   இவை என்ன தெரிவிக்கின்றன என்றால், ஒரு தேசம் என்ற முறையிலே, நம்முடைய கலாச்சாரம் என்ன, நம்முடைய நற்பண்புகள் யாவை, இவற்றை எப்படி நாம் போற்றி வருகிறோம், எதிர்பார்ப்புகள் உடைய ஒரு பாரதம், சமூகக் கட்டமைப்பு, போக்குவரத்து கட்டமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்போடு கூடவே, கலாச்சாரக் கட்டமைப்புக்கு வேகமளித்து, விரைவான வளர்ச்சியைக் காண இயலும்.  எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, இன்று கர்த்தவ்ய பத் என்ற முறையிலே, தேசத்திற்கு, கலாச்சாரக் கட்டமைப்பின் ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு கிடைத்திருக்கிறது.   கட்டிடவியல் தொடங்கிக் கோட்பாடுகள் வரை, உங்களுக்கு இங்கே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் காட்சிகளும் காணக் கிடைக்கும்.   இங்கே கற்கவும் பல விஷயங்கள் கிடைக்கும்.   நான் தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன்.   உங்களனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன், நீங்கள் வாருங்கள், இந்தப் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கர்த்தவ்ய பத்தை, வந்து பாருங்கள்.   இந்தக் கட்டுமானத்திலே உங்களால், வருங்கால பாரதத்தைக் காண முடியும்.  இங்கே இருக்கும் சக்தி, நமது பரந்த பாரதத்தின் பொருட்டு, புதியதொரு தொலைநோக்கை அளிக்கும், புதியதொரு நம்பிக்கையை அளிக்கும்.   மேலும் நாளை தொடங்கி, அடுத்த மூன்று நாட்கள், அதாவது வெள்ளி சனி மற்றும் ஞாயிறு, இந்த மூன்று நாட்களிலும், நேதாஜி சுபாஷ் பாபுவின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட, மாலை வேளையில் ட்ரோன் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   நீங்கள் இங்கே வாருங்கள்,  உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள்.   இவற்றை நீங்கள், ஹேஷ்டேக், கர்த்தவ்ய பத் சமூக வலைத்தளத்திலும் கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள்.   எனக்குத் தெரியும், இந்தப் பகுதி முழுவதும், தில்லிவாசிகளின் இதயத் துடிப்பு என்பது.   இங்கே மாலையிலே, பெரிய எண்ணிக்கையில் மக்கள் தங்கள் குடும்பத்தாரோடு வருகிறார்கள்.   நேரம் செலவு செய்கிறார்கள்.   கர்த்தவ்ய பத்தின் திட்டமிடல், வடிவமைப்பு, மேலும் ஒளியமைப்பு, இவை கவனத்தில் எடுத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.   எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கர்த்தவ்ய பத்தின் இந்தக் கருத்தூக்கம், தேசத்திலே, கடமை பற்றி ஏற்படுத்த இருக்கும் விழிப்பு, இதன் பெருக்குத் தான், நம்மை புதிய மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதியினுடைய, வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.   இந்த நம்பிக்கையுடனே, உங்கள் அனைவருக்கும், ஒருமுறை மீண்டும், பலப்பல, நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.   என்னோடு இணைந்து கூறுங்கள் நான் நேதாஜி என்பேன் நீங்கள் அமர் ரஹே அமர் ரஹே என்று கூறுங்கள்.  பலப்பல நன்றிகள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe