
குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல்(62) நேற்று (12.12.2022) பதவியேற்றார். அவருடன் 8 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து, தலைநகர் காந்திநகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திங்கள் கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேலுக்கு, ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து, 16 அமைச்சர்களும் பதவிஏற்றுக் கொண்டனர். இவர்களில் கனுபாய் தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பகவந்த்சிங் ராஜ்புத், குன்வாரிஜி பவாலியா, முலுபாய் பேரா, குபேர், பானுபென் பாபாரியா ஆகியோ்ர் கேபினட் அமைச்சர்கள் ஆவர்.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சகா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு மேடையில் எழுந்து நின்ற பிரதமர், சிரம் தாழ்த்தி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் பல்வேறு மடங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி, 2024 நாடாளுமன்றத்திற்கான முன்னோடி வெற்றி என்று பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

படிப்படியாக உயர்ந்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்!
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பிறந்த பூபேந்திர படேல், அம்மாநிலத்தின் பெரும்பான்மை மிக்க படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இவர், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை நெருங்கிய தொடர்பில் உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதற்கு முன், உள்ளூர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள மேம்நகர் நகராட்சியின் தலைவராக இரு முறை பதவி வகித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 1.17 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் முதல்வராக இவர் அறிவிக்கப்படும் வரை, ஆமதாபாதை தாண்டி கட்சியினர் மத்தியிலேயே அறியப்படாத முகமாக பூபேந்திர படேல் இருந்தார்.
இவர், கடந்த ஓராண்டாக ஆட்சியை வழிநடத்தி சென்ற விதத்தில் பா.ஜ.க தலைமைக்கு திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.