இந்தியா-இலங்கை மூன்றாவது ஒருநாள் ஆட்டம் – திருவனந்தபுரம்
– 15 ஜனவரி 2023
317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் தொடரில் இறுதிப் போட்டி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி (390/5. விராட் கோலி 166*, ஷுப்மன் கில் 116, ரோஹித் ஷர்மா 42, ஷ்ரேயாஸ் ஐயர் 38, ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கட்டுகள்) இலங்கை அணியை (22 ஓவர்களில் 73 ரன் ஆல் அவுட், சிராஜ் 4/32, ஷமி 2/20, குல்தீப் 2/16)
பூவா தலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மட்டையாட முடிவு செய்தார். அவர் 49 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேற, கில் மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்கள். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்தார்கள். கில்லுக்கு இது இரண்டாவது ஒருநாள் போட்டி; அதிலும் சதம். விராட் கோலிக்கு இது 46வது ஒருநாள் போட்டி சதமாகும். கில் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் கிடைத்தது.
இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியை மட்டுமே அளித்தார்கள். மிக அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் இலங்கை அணியின் முதல் வரிசை வீரர்களை உடனுக்குடன் வீழ்த்தி சரிவை ஆரம்பித்து வைத்தார். இதிலிருந்து மீளவே முடியாத இலங்கை அணி இறுதியில் 22 ஓவர்களில் 73 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் பத்து ஓவர்கள் பந்து வீசி அதிலே ஒரு மெய்டனும் வீசி, 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சாமி மற்றும் குல்தீப் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது.
கோலியின் சாதனைகள்:
கோலி இந்த ஆட்டத்தில் அடித்த சதம் மூலம் இந்திய மண்ணில் அதிக சதமடித்த வீரராகிறார். விராட் கோலி (21 சதங்கள், 105 மேட்சுகளில்), சச்சின் டெண்டுல்கர் (20 சதங்கள், 164 மேட்சுகளில்). இலங்கைக்கு எதிராக அதிக (மொத்தம் 10) சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைச் செய்தார். 85 பந்துகளில் சதமடித்த விராட் கோலி அடுத்த 25 பந்துகளில் 66 ரன் அடித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. மேலும் கோலி இந்த ஆட்டத்தில் 85 ரன்கள் ஆடித்தபோது ஒருநாள் போட்டிகளில் 20000 ரன்களைத் தாண்டியுள்ளார். ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் விராட் கோலி பெற்றார்.